கோலாலம்பூர், ஏப்ரல் 8 – ஏமன் நாட்டில் சிக்கி இருக்கும் மலேசியர்களை, அரசாங்கம் தனி விமானங்களின் மூலமாக பாதுகாப்பாக மீட்டு தாயகம் அழைத்து வரத் தொடங்கியுள்ளது.
இதுவரை 121 மலேசியர்கள் ஏமன் நாட்டிலிருந்து தனி விமானங்கள் மூலமாக அழைத்து வரப்பட்டுள்ளனர். மற்ற மலேசியர்கள் அடுத்தடுத்து மூன்று விமானங்களில் வரவழைக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச்151 -ல் 49 பேரும், ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் யுஎல்314-ல் 17 பேரும், எமிரேட்ஸ் விமானம் இகே346 -ல் 41 பேரும் மலேசியா திரும்பினர்.
இதனிடையே நேற்று இரவு 8.50 மணியளவில் 14 மலேசியர்கள் கத்தார் ஏர்வேஸ் QR852 விமானம் மூலமாக கேஎல்ஐஏ விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
இன்று மேலும் 32 மலேசியர்கள் இரண்டு தனி விமானங்கள் மூலமாக அழைத்து வரப்படுவார்கள் என்று மலேசிய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
ஏமனில் உள்நாட்டு போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், அங்கு வசித்து வரும் 879 மலேசியர்களை மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில் மலேசியா இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.