Home நாடு ரொம்பின் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி: அம்னோவுக்கு பாஸ் பதிலடி

ரொம்பின் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி: அம்னோவுக்கு பாஸ் பதிலடி

601
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 15 – முன்னாள் அமைச்சரும், தூதருமான ஜமாலுடின் ஜார்ஜிசின் அகால மரணத்தால் நடைபெறவிருக்கும் ரொம்பின் இடைத்தேர்தலில் பாஸ் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதி என அக்கட்சித் உதவித் தலைவர் டத்தோ துவான் இப்ராகிம் துவான் மான் (படம்) தெரிவித்துள்ளார்.

Tuan-ibrahim-PAS“செம்பாக்கா இடைத்தேர்தலில் அம்னோ போட்டியிடவில்லை என்பதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் ரொம்பின் தொகுதியில் நாங்கள் போட்டியிடுவது உறுதி. இந்த முடிவு பாஸ் மத்திய செயலவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது” என்று தனது முகநூல் (பேஸ்புக்) பதிவு ஒன்றில் துவான் இப்ராகிம் கூறியுள்ளார்.

செம்பாக்கா சட்டமன்றத்தொகுதிக்கான இடைத் தேர்தல் முன்னாள் கிளந்தான் மந்திரி பெசாரும், பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவருமான நிக் அசிஸ் மரணத்தால் நடைபெற்றது. அந்த இடைத் தேர்தலில் போட்டியிடாமல் அம்னோ-தேசிய முன்னணி ஒதுங்கிக் கொண்டன. சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே போட்டியில் இறங்கிய காரணத்தால் பாஸ் அபாரமான வாக்கு வித்தியாசத்தில் அங்கு வெற்றி பெற்றது.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக, ரொம்பின் தொகுதியில் அம்னோவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் பாஸ் கட்சிக்கு இல்லை என்று குறிப்பிட்ட துவான் இப்ராகிம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மலேசியாவின் நிதியை மத்திய அரசு வீணடித்து வருவதாக சாடினார்.

“இரு கட்சிகளின் பணம், நேரம், ஆற்றல் ஆகியவற்றை வீணடிக்காமல் இருக்க ரொம்பின் இடைத் தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிடக் கூடாது என்று பகாங் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அட்னான் யாக்கோப் கூறி இருப்பதை ஏற்க இயலாது. இதுதான் அவர்களது நிலைப்பாடு எனில், இதே காரணத்தை முன்வைத்து பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் பிகேஆர் போட்டியின்றி வெற்றி பெற அவர்கள் ஒப்புக் கொள்வார்களா?” என்று துவான் இப்ராகிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

செம்பாக்கா தொகுதியில் அம்னோ போட்டியிடாவிட்டாலும் அக்கட்சியை பாஸ் கட்சியின் நண்பனாக கருத இயலாது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ரொம்பின் இடைத்தேர்தல் மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 4ஆம் தேதி இத்தொகுதி உறுப்பினர் டான்ஸ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிஸ் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததையொட்டி இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.