கோலாலம்பூர், ஏப்ரல்16 – பிரதமர் நஜிப்புக்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தொடுத்து வரும் தாக்குதல்களைத் தொடர்ந்து, நடப்பு அம்னோ தலைவர்கள் நஜிப் பக்கம் சாய, பல முக்கிய பிரமுகர்கள் மகாதீருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அல்தான்துயா கொலை வழக்கில் மறு விசாரணை தேவை என்று காவல்துறை முன்னாள் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ மூசா ஹாசன் வலியுறுத்தி உள்ளதோடு, இக்கொலை வழக்கு தொடர்பில் துன் மகாதீர் எழுப்பியுள்ள அனைத்து கேள்விகளுக்கும் காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மூசா ஹாசானின் கருத்து முக்கியமாக கருதப்படுகின்றது. காரணம், அன்வாரின் முதல் ஓரினப் புணர்ச்சி வழக்கில், மகாதீர் பிரதமராக இருந்த காலத்தில், அந்த வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக பணியாற்றியவர் அவர். அதன் பிரதிபலனாக, கால ஓட்டத்தில் காவல் துறையின் உயர்பதவிகள் பெற்று ஐஜிபியாகவும் உயர்ந்தார்.
“பல்வேறு கேள்விகளை எழுப்புவதால் மகாதீர் மீது தவறு காணவோ அல்லது சில தரப்பினர் கோருவதுபோல் தேச நிந்தனை தொடர்பாக குற்றம் சாட்டவோ முடியாது. தற்போதைய நிலையில் அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. பிறகு காவல்துறை எதற்காக அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்? அவர் கேள்விகளை மட்டுமே எழுப்பியுள்ளார். அல்தான்துயாவை கொலை செய்ய உத்தரவிட்டது யார் என கேட்பது தேச நிந்தனைக்குரிய ஒன்றா? உத்தரவிட்டது யார் என்பதை அவர் தெரிந்து கொள்ள விரும்புகிறார். எனவே அதற்கான விடையைக் கண்டுபிடிப்பதில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும்,” என்றும் மூசா ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
அல்தான்துயா கொலை வழக்கில் மறு விசாரணை நடந்தால்தான் மகாதீர் எழுப்பிய கேள்விகளுக்கு காவல்துறையால் பதிலளிக்க முடியும் என்றும் தனது டுவிட்டர் பதிவு ஒன்றில் மூசா ஹாசன் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நஜிப் குறித்து ஆட்சேபத்துக்குரிய அறிக்கைகளை வெளியிடுவதால் மகாதீர் மீது தேச நிந்தனை குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல அமைப்புகளும், தனிநபர்களும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இருப்பினும், இதுவரை காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.