Home இந்தியா இந்தியாவிற்கு 3000 டன் யுரேனியம் வழங்க கனடா சம்மதம்!

இந்தியாவிற்கு 3000 டன் யுரேனியம் வழங்க கனடா சம்மதம்!

525
0
SHARE
Ad

modiஒட்டாவா, ஏப்ரல் 16 – இந்தியாவிற்கு 3,000 டன் யுரேனியம் வழங்க கனடா சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கான இருநாடுகளின் ஒப்பந்தம், அந்நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் நேற்று கையெழுத்தானது.

இந்தியப் பிரதமர் மோடி தனது மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தின் இறுதிக்கட்டமாக, கனடாவிற்கு நேற்று சென்றடைந்தார். இந்த பயணத்தின் மூலம். 42 ஆண்டுகளுக்குப் பிறகு, கனடாவிற்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.

ஒட்டாவாவில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரை சந்தித்துப் பேசிய மோடி, இந்தியா-கனடா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து கனடா, இந்தியாவிற்கு 3000 டன் யுரேனியத்தை வழங்க சம்மதம் தெரிவித்தது. அதன்படி இரு தலைவர்களும் சுமார் 1,600 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக மோடி கூறியதாவது:-

“கனடாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தம், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக மாறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, கனடாவின் கேமகோ அணு உற்பத்தி நிறுவனம் மூலம் இந்தியாவிற்கு 5 ஆண்டுகளுக்கு 3,000 டன் யுரேனியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா, கஜகஸ்தான் நாடுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு யுரேனியம் வழங்கும் மூன்றாவது நாடு கனடா ஆகும். இதன் மூலம் இந்தியாவின் மின்சார, எரிசக்தித் தேவைகள் நிறைவேற்றப்படும்.”

“இதேபோல், இந்தியா – கனடா இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான செயல் திட்டம் விரைவில் தயார் செய்யப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.