Home நாடு நேர்காணல்: தோட்டங்களை விட்டு ஓடிவந்த தமிழர்களின் நிலவியல் வாழ்க்கையே கே.பாலமுருகனின் நாவல்!

நேர்காணல்: தோட்டங்களை விட்டு ஓடிவந்த தமிழர்களின் நிலவியல் வாழ்க்கையே கே.பாலமுருகனின் நாவல்!

1497
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 18 – கே.பாலமுருகன் (படம்) எனும் படைப்பாளி மலேசிய தமிழிலக்கிய சூழலில் சிறுகதைகள், நாவல்கள் மூலம் நன்கு அறியப்பட்ட இளம் படைப்பாளி. தனது 23ஆவது வயதில் அவர் எழுதிய ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ எனும் நாவல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் ஆஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய தேசிய அளவிலான தமிழ் நாவல் போட்டியில் 2007ஆம் ஆண்டில் முதல் பரிசை வென்று தமிழ் இலக்கியச் சூழலை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

அதோடுமட்டுமல்லாமல் அவருடைய அந்த நாவல், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் முஸ்தப்பா அறவாரியத்தின் வழியாக அவருக்கு ‘கரிகாற் சோழன்’ விருதைப் பெற்றுக் கொடுத்தது. நாவல் பயணத்தில் தனித்து விளங்கும் கே.பாலமுருகனின் அடுத்த இரண்டு குறுநாவல்கள் அடங்கிய ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ எனும் தொகுப்பு குறித்து அவரிடம் உரையாடியபோது:

unnamed (1)

#TamilSchoolmychoice

கேள்வி: ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ எனும் நாவல் எப்படி உருவானது? அதன் பின்னணி என்ன?

கே.பாலமுருகன்: நான் எனது 11ஆவது வயது முதல் 15ஆவது வயதுவரை ஆற்றோரக் கம்பத்தில்தான் வாழ்ந்தேன். பின்னர் அந்த ஆற்றோரம் இருந்தவர்களுக்கு ஒரு மலிவு அடுக்குமாடி கட்டித்தரப்பட்டது. நாங்கள் சீனக் கம்பத்திலேயே இருந்துவிட்டோம். என் நண்பர்கள் பெரும்பாலானோர் அடுக்குமாடிக்குப் போய்விட்டதால் வாரத்தில் நான்குமுறை அங்குப் போய் அவர்களுடன்தான் இருப்பேன்.

சில சமயங்களில் வெள்ளிக்கிழமைகளில் அங்கேயே தங்கிவிடுவேன். அடுக்குமாடி வாழ்க்கை என்பது பல கிராமங்களை/ கம்பங்களைக் கொண்டு வந்து ஒரே இடத்தில் குவிக்கும் ஓர் ஏற்பாடுதான். அங்குத் தனி வீட்டில் வாழ்ந்தவர்கள் இங்கு அடுக்குமாடியில் ஏதோ தடுமாற்றத்துடனும் சுதந்திரம் பறிப்போனவர்கள் போலவும் வாழ்ந்தார்கள். இடம் மாறும்போது மனித வாழ்க்கையின் போக்கும் மாறிவிடுவதாக உணர்ந்தேன். அங்கிருந்து உருவான ஒரு தெறிப்புத்தான் இந்த நாவலுக்கான களம் எனச் சொல்லலாம். பெருநகர் வாழ்க்கைக்குள் நுழைந்து கரைந்து காணாமல் போகும் முன் இதுபோன்ற ஆற்றோரங்களிலும் அடுக்குமாடிகளிலும் புறம்போக்கு நிலங்களிலும் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையைக் கொஞ்சமாவது பதிவு செய்ய வேண்டும் என உணர்ந்தே இந்தக் குறுநாவலை எழுதினேன்.

கேள்வி: அந்த ஆப்பே கடை எனும் தலைப்பை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

கே.பாலமுருகன்: தோட்டங்களிலும் கம்பங்களிலும் நகரங்களிலும் இந்த ஆப்பே கடை என்பது நம் வாழ்க்கைக்குள் ஒரு மறக்க முடியாத இடத்தைக் கொண்டிருக்கிறது என்றுத்தான் சொல்ல வேண்டும். 1970களுக்கு மேல் வாழ்ந்த நம் பெற்றோர்களையும் தாத்தா பாட்டிகளையும் கேட்டால் இதுபோன்ற ஆப்பே கடைகளையும் ஆப்பேக்களையும் மறவாமல் நினைவுக்கூர்ந்து சொல்வார்கள். என் தோட்டத்தில் அப்படிப்பட்ட ஓர் ஆப்பே கடை இருந்தது. அங்குத்தான் அப்பாவுடன் சென்று காப்பிக் குடிப்பேன். அதே கடையில் பட்டை சாராயமும் விற்றார்கள். அதற்காகக் கூடும் கூட்டமும் இருந்தது. அந்தப் பதிவை முன்வைத்துதான் ஆப்பே கடையை என் நாவலுக்கான மையமாக மாற்றினேன். நம் இந்திய வாழ்வின் அந்நியமற்ற ஓர் இடம்தான் இந்த ஆப்பே கடை. குண்டர் குழுவில் இருந்த பலர் ஆப்பே கடைகளில் உரையாடல்கள் நடத்துவதும் அது கைக்கலப்பில் முடிந்ததும் உண்டு.

unnamed (3)

கேள்வி: உங்களின் இந்த நாவல் வன்முறையைக் கதைக்கருவாகக் கொண்டுள்ளதாக அறிகிறேன். அது உண்மையா?

கே.பாலமுருகன்: தோட்டத் துண்டாடல்களுக்குப் பிறகு, வேலை இழப்புக் காரணமாகத் தோட்டங்களிலிருந்து ஓடிவந்து தனக்கான இடம் எது எனத் தெரியாமல் திண்டாடி, கிடைத்த புறம்போக்கு நிலத்தின் நிலையற்ற ஒரு வாழ்வை வாழ்ந்து கழித்த நம் இந்திய வாழ்வில் வன்முறை நுழைக்கப்பட்ட, வன்முறை ஒரு தெறிப்பாக வெளிப்பட்ட கதையைத்தான் இந்த நாவலில் மையப்பொருளாகப் புனைந்துள்ளேன். தோட்டங்களில் இந்தத் திருவிழா சண்டை என்பது மிகவும் பேசப்பட்ட ஒன்றாகும். அதையும் கதையின் ஊடாகச் சொல்லிச் சென்றுள்ளேன். வன்முறை என்பது புறவயமான பிரச்சனையாக இருந்தாலும் அது ஒரு சமூகத்திற்குள் ஊறிப்போனதற்கு, இடமற்று நாடோடிகளாக நகர்ந்து கொண்டே இருந்த குறிப்பிட்ட சமூக மனிதர்களின் அகவயத்திலிருந்து கிளம்பி வந்த உணர்வுகளே கார்ணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். வன்முறை உடலைக் காயப்படுத்துவதாக இருப்பினும் அது பிற்படுத்தப்பட்ட அடையாளமில்லாமல் அலைந்த மனிதப் புறக்கணிப்பின் உச்சத்திலிருந்து வெடித்திருக்கிறது. இதுதான் கண்டுகொள்ளப்படாத மலேசிய இந்திய வாழ்க்கை. அதைத்தான் இந்த நாவலின் கதைப்பொருளாகக் கொண்டிருக்கிறேன்.

கேள்வி: இதற்கு முந்தைய தமிழ் நாவல்கள் இதைப் பற்றி பேசியதில்லையா?

கே.பாலமுருகன்: இதுவரை வாசித்த மிக முக்கியமான நண்பர்கள், விமர்சகர்கள், இந்தக் குறிப்பிட்ட புறம்போக்கு நிலவியலில் வாழ்ந்த தமிழர்களின் இருண்ட பகுதிகளை முதன்மையாக்கி நாவல்களில் சொல்லப்பட்டதில்லை என்றே குறிப்பிட்டார்கள். நாவல் வெளியீட்டுக்குப் பின்பு பொது வாசிப்பே அதனை முடிவு செய்யும் என நினைக்கிறேன்.

கேள்வி: அப்படியென்றால் உங்கள் நாவலில் இலட்சியவாத கதைப்பாத்திரங்களோ சூப்பர் ஹீரோக்களோ இல்லை எனச் சொல்லலாமா?

கே.பாலமுருகன்: இலக்கியம் எந்த இலட்சியத்தைப் பற்றியும் பேசுவதற்காக இல்லை என்கிறபோது பிறகு இலட்சியவாதங்கள் நிரம்பிய மனிதர்கள் எதற்கு? இலக்கியம் முழுக்க பராபட்சமில்லாமல் நிஜமான வாழ்க்கையைக் காட்டுவதே அதன் முக்கிய பங்காகும். இதுவரை கண்டிரா இதுவரை கவனிக்கப்படாத இதுவரை சொல்லப்படாத மனித வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் காட்டுவதும் பேசுவதும்தான் இலக்கியம் எனப் புரிந்துகொள்ளப்படுகிறது. அதிலிருந்து வாசகர்கள் தனக்கான கருத்தையும் தனக்கான விமர்சனத்தையும் தனக்கான பார்வையையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். யாருடைய மனத்திலும் தீர்ப்புகளையோ கருத்துகளையோ திணிக்கும் நோக்கம் இலக்கியத்திற்கு இல்லை. எனது நாவலில் எப்பொழுதுமே தோல்விகளும் அவமானங்களும் குற்றங்களும் வலிகளும் போராட்டங்களும் அழுகைகளும் நிரம்பிய சாமான்ய மனிதர்களைத்தான் முன்னிறுத்துகிறேன்.

கேள்வி: உங்கள் நாவல் வெளியீடு எங்கு எப்பொழுது நடைபெறுகிறது?

கே.பாலமுருகன்: வருகின்ற 10ஆம் திகதி மே மாதத்தில் மாலை மணி 2.15க்கு கோலாலம்பூர் சோமா அரங்கம், விஸ்மா துன் சம்பந்தனில் என்னுடைய இரு நாவல்களின் வெளியீடும் நடைபெறவுள்ளது. டாக்டர் மா.சண்முகசிவாவின் இலக்கிய உரையோடு, கவிஞர் யோகி, எழுத்தாளர் ந.பச்சைபாலன், திரு,.பி.எம் மூர்த்தி அவர்களின் நூலாய்வுடன், மைஸ்கீல் அறவாறியத்தின் இயக்குனரும் தமிழ் நெஞ்சருமான சி.பசுபதி அவர்களின் தலைமையில் எனது நாவல்கள் வெளியீடு நடைப்பெறவிருக்கிறது. அனைத்து இலக்கிய நண்பர்களும் பொது மக்களும், ஆசிரியர்களும் இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகையளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி

1932582_10203318344137984_1698483407_o

 

 

 

 

நேர்காணல்: சு.தினகரன்