ஹூஸ்டன், ஏப்ரல் 21 – அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ‘ஓல்டுலேக் ஹைலேண்ட்’ பகுதியில் இந்து கோவில் உள்ளது. இந்த கோவில் மீது மர்ம மனிதர்கள் திடீரென தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். கோவிலின் கதவுகளிலும், சுவர்களிலும் ‘666’ என்ற எண்ணை எழுதி உள்ளனர்.
மேலும், பெருக்கல் குறி போட்டு விஷமத்தனமான செயலில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகக்குழுவைச் சேர்ந்த கிருஷ்ணா சிங் கூறுகையில், “இந்து கோவில் மீது தாக்குதல் நடந்த சம்பவம் கடந்த வாரம் திங்கட்கிழமை தெரியவந்தது. இதனால் நாங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தோம்”.
“இது இங்குள்ள இந்து சமூக மக்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. கோவில் பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் எழுப்ப பக்தர்கள் முடிவு செய்துள்ளனர்.”
“கோவிலில் கண்காணிப்பு கேமராக்களும், போதுமான விளக்கு வசதியும் செய்ய வேண்டும். இதன்மூலமாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது தடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் கடந்த 3 மாதங்களில் நடந்த 3–வது சம்பவம் இதுவாகும். கடந்த பிப்ரவரி மாதம் வாஷிங்டனில் உள்ள 2 கோவில்கள் இதுபோல் சேதப்படுத்தப்பட்டது. அந்த கோவில்களில் ‘வெளியே போ’ என்றும், ‘பயம்’ என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.