பாட்னா, ஏப்ரல் 23 – பீகார் மாநிலத்தில் நேற்று நள்ளிரவு வீசிய திடீர் சூறாவளி காற்றில் 65 பேர் பலியாகியுள்ளனர். பிகாரில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நிதீஷ் குமார் நேற்று புதன்கிழமை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
அதன் பிறகு பாட்னா திரும்பிய அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பிகாரில் சூறாவளிக்கு 65 பேர் உயிரிழந்துவிட்டனர். இவர்களில் 30 பேர் வரை பூர்ணியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 17 பேர் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். மற்ற 18 பேர், பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்”.
“இந்த மாவட்டங்களில் பயிர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர்ச்சேதங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். சூறாவளி பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேசியுள்ளேன். அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்” என்றார் நிதீஷ் குமார்”.
பூர்ணியா, மாதேபுரா, சஹார்ஸா, மதுபானி, சமஸ்திபூர், தர்பங்கா ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திடீரென மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீசியது. இதில், அந்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மின்சார துண்டிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் சேதமடைந்தன. அத்துடன், சோளம், கோதுமை, பயறு வகைகள் ஆகிய பயிர்கள் நாசமடைந்தன. சாலைகளில் மரங்கள் சாய்ந்து கிடப்பதால், அப்பகுதிகளில் சாலைப் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள், சூறாவளியால் ஏற்பட்ட சேத விவரங்களை கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளன. திடீர் சூறாவளிக்கு இதுவரை 65 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலத்த காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.