புதுடில்லி, ஏப்ரல் 25 – இன்று காலை நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சம்பவத்தில் உயிர் சேதங்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம் இந்தியாவில் டில்லி, பீகார், மேற்குவங்கம், தமிழகம் , உத்தரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்திய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கம் குறித்து இந்தியப் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், “வட மாநிலங்களில் டில்லி உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட நில நடுக்கம் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து பீகார், உத்திரப் பிரதேசம், சிக்கிம் முதல்வர்களுடன் பேசியுள்ளேன். விரைவில் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். நேபாளத்தில் மீட்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவி செய்யும்.” என்று தெரிவித்துள்ளார்.
நேபாளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்தியாவின் தலைநகர் டில்லி அருகே உள்ள நொய்டாவில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.