Home உலகம் நேபாள நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 2,000 தாண்டியது!

நேபாள நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 2,000 தாண்டியது!

561
0
SHARE
Ad

காட்மாண்டு, ஏப்ரல் 26 – இன்றுவரை நேபாள நிலநடுக்கத்தால் மாண்டவர்களின் எண்ணிக்கை 2,000-த்தை தாண்டியுள்ளது. நேபாளத்தின் அண்டை நாடான இந்தியா உடனடி நிவாரண உதவிகளை வழங்கியதை அடுத்து, இந்திய விமானப் படை விமானங்கள் நிவாரண உதவிகளோடு காட்மாண்டு விமான நிலையத்தை வந்தடைந்தன.

Nepal Earthquake 1

நிலநடுக்கத்தில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியர்களில் பலர் மீட்கப்பட்டு பத்திரமாக விமானங்கள் மூலம் டில்லிக்கு திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

நேபாளத்தின் மற்றொரு அண்டை நாடான சீனாவும் உடனடி நிவாரண உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. சீனாவின் மீட்புக் குழுவினர் இன்று காட்மாண்டு வந்தடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அறிக்கையில், இந்த பேரிடர் சமயத்தில் நேபாள மக்களுடன் இந்திய அரசாங்கம் என்றும் இணைந்திருக்கும் என்றும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Ind Airforce leaving for Katmandu

காட்மாண்டுவுக்கு நிவாரணப் பொருட்களோடு டில்லியிலிருந்து புறப்படும் இந்திய விமானப் படை

சீன அதிபர் சீ ஜின்பிங் நேபாள அதிபர் ராம் பரண் யாதவ்விற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதோடு, நேபாளப் பிரதமர் கொய்ராலாவிற்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) உடனடி சுகாதாரம் மற்றும் அவசரத் தேவைகளுக்கு உதவியாக 350,000 அமெரிக்க டாலர் வழங்கியுள்ளது. மேலும் நிதிகள் மீட்புப் பணிகளுக்காக வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

நேபாளத்தின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளவர்களையும், சடலங்களையும் மீட்பதில் மீட்புப் பணியினர் தீவிரமாகப் பாடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் காட்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் நேபாளத்தை விட்டு வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர்.

படங்கள்: EPA