காட்மாண்டு, ஏப்ரல் 27 – 80 வருடங்களுக்குப் பிறகு நேபாள நாட்டை தாக்கிய கடுமையான நில அதிர்வு, அந்நாட்டில் மிகப் பெரிய அளவில் சேதாரத்தை ஏற்படுத்தி உள்ளது. 2500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், 6600-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் பொதுவெளியில் எரிக்கப்படுவதால் அங்கு பொதுச் சுகாதாரம் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது.
இந்தியா, நூற்றுக்கும் அதிகமான மீட்புப்படை வீரர்களை அங்கு அனுப்பி மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும், முகாம்களில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து வரும் நிலையில், உலக நாடுகளும் நேசக்கரம் நீட்டி உள்ளன.
ஐநா சபை:
ஐநா சபை நேபாளில் பொதுச் சுகாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக 14 உலகத் தரம் வாய்ந்த மருத்துவக் குழுக்களை அங்கு அனுப்பி உள்ளது. மேலும், 15 மீட்புக் குழுக்களையும் அங்கு அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக அந்தக் குழுக்களுக்கு தலைமை வகிக்கும் ஒர்லா ஃபாகன் கூறுகையில், “சுகாதாரக் குறைபாட்டால் பாதிக்கப்படுபவர்களை காப்பாற்ற வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஐநா செய்து வருகின்றது. மீட்புக் குழுக்களும், மருத்துவக் குழுக்களும் இராணுவ விமானங்களில் அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்” என்று கூறியுள்ளார்.
ஜெர்மன்:
ஜெர்மன் அரசு மருத்துவர்கள், மீட்புப் படையினர் என 52 பேர் அடங்கிய குழுவை நேபாள நாட்டின் தலைநகர் காட்மாண்டுவிற்கு அனுப்பி உள்ளது. அதுமட்டுமல்லாமல் மண்ணில் புதைந்தவர்களை மீட்பதற்காக மோப்ப நாய்களையும் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.
இஸ்ரேல்:
இஸ்ரேல் அரசு மீட்பு நடவடிக்கைக்காக சுமார் 260 பேர் அடங்கிய இராணுவக் குழுவை அங்கு அனுப்பி உள்ளது. அதுமட்டுமல்லாமல் 122 மருத்துவர்கள் கொண்ட குழுவையும் காட்மாண்டுவிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. அவர்கள் செல்ல இருக்கும் விமானத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களும் கொண்டு செல்லப்படும் என அந்நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேற்கூறிய நாடுகள் மட்டுமல்லாமல் அமெரிக்கா, அரபு எமிரேட்ஸ், ஐரோப்பா, போலாந்து, கனாடா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் நேபாள நாட்டிற்கு உதவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.