கர்நாடகா, ஏப்ரல் 30 – அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் மே மாதம் 12-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜெயலலிதா பின்னர் ஜாமீனில் வெளியே வந்ததோடு, தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக அரசு நியமித்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த திங்கள் கிழமை தீர்ப்பளித்தது.
எனவே இதையடுத்து கர்நாடக அரசு, ஏற்கனவே ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த பி.வி. ஆச்சார்யாவை அரசு வழக்கறிஞராக நியமித்தது.
இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, ஆச்சார்யா நீதிமன்றத்தில் 18 பக்கங்கள் கொண்ட வாதத்தை தாக்கல் செய்துள்ளார். இது குறித்து ஆச்சார்யா கூறுகையில்;-
“ஜெயலலிதா வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதத்தை ஒரு நாளில் சமர்பிக்க வேண்டும் என்பதால் அந்த வழக்கு பற்றி நன்கு அறிந்த என்னை அரசு வழக்கறிஞராக நியமித்துள்ளனர்”.
“மேலும், நான் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்கும். இந்த வழக்கில் வரும் மே மாதம் 12-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். கர்நாடக அரசுதான் இந்த வழக்கை நடத்தும் நிலையில், வழக்கை செயல்படுத்தும் முழு பொறுப்பும் கர்நாடக அரசுக்கே வந்துவிடுகிறது”.
“கர்நாடக அரசின் கருத்தை கேட்காமலேயே, அரசு வழக்கறிஞரை நியமித்ததை தான் முக்கிய வாதப்பொருளாக வைத்துள்ளோம். மே 12-ஆம் தேதிக்குள், தீர்ப்பளிக்க முடியாவிட்டால், மேலும் காலக்கெடு தருமாறு, உச்சநீதிமன்றத்திடம், உயர் நீதிமன்ற நீதிபதி கோரிக்கை விடுக்கலாம்”.
“வழக்கின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை நான் எப்படி சொல்ல முடியும். எவ்வளவு சிறப்பாக வாதத்தை சமர்ப்பிக்க முடியுமோ அவ்வளவு சிறப்பாக வாதத்தை சமர்ப்பித்துள்ளோம் என்றும் இறுதி முடிவை நீதிமன்றம் தான் எடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.