சென்னை, மே 5 – தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் திடீரென்று சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ள சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. விஜயகாந்த் கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் மூன்றாவது முறையாக சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சில மாதங்களுக்கு முன் சிங்கப்பூர் சென்று தனது மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக நடித்த ‘சகாப்தம்’ படப்பிடிப்பு பணிகளை கவனித்தார். அப்போது அவர் மருத்துவ பரிசோதனைகளும் செய்து கொண்டதாகவும், சிகிச்சை பெற்றதாகவும் தகவல் வெளியானது.
சிங்கப்பூரில் இருந்து 2 மாதத்துக்குப் பின் சென்னை திரும்பிய விஜயகாந்த் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து சில நாட்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்தார்.
அதன்பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டார். சமீபத்தில் மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து எதிர்க்கட்சி பிரதிநிதிகளை தனது தலைமையில் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணைகட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி மனு கொடுத்தார்.
பின்னர் விஜயகாந்த் சென்னை திரும்பினார். இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு விஜயகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி பிரேமலதாவும் சென்றார்.
விஜயகாந்த் சிங்கப்பூர் பயணம் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாம். அவர் விமானத்தில் ஏறிச் சென்ற பிறகுதான் வெளியே தெரிய வந்தது என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தனர்.