Home நாடு காவல்துறையின் கோட்பாடுகளுக்கு ஏற்ப மௌனம் காக்கிறேன் – சைருல்

காவல்துறையின் கோட்பாடுகளுக்கு ஏற்ப மௌனம் காக்கிறேன் – சைருல்

529
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 10- அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பிலான மர்மங்கள் மேலும் நீடிக்கும் எனத் தெரிகிறது. ஏனெனில் காவல்துறையின் கோட்பாடுகளுக்கு ஏற்பவே தாம் மௌனம் காத்து வருவதாக அக்கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சைருல் அசார் ஓமார் தெரிவித்துள்ளார்.

Sirul - Altantuya case

இது தொடர்பாக ‘சிட்னி மார்னிங் ஹெரால்ட்’ பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், குறிப்பிட்ட அக்கொலை வழக்கு தொடர்பிலான அனைத்து விவரங்களையும் வெளியிடுவதற்கு தாம் மனதளவில் தயாராக இருப்பதை தம்மால் இன்னும் உறுதி செய்ய முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“நான் காவல்துறையின் உறுப்பினராக இருந்துள்ளேன். நாங்கள் காவல் துறையில் ரகசியக் காப்பு பிரமாணம் எடுத்திருப்பதால், மௌனம் காக்க வேண்டும் என்ற கோட்பாட்டிற்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள்,” என சைருல் அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கருத்தானது அவரிடம் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றமாகக் கருதப்படுகிறது.

ஏனெனில் கடந்த பிப்ரவரியில் அளித்த தொலைபேசி வழியிலான பேட்டி ஒன்றில், “கொலை வழக்கு குறித்த அனைத்து விவரங்களையும் வெளியிடுவது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகிறேன்,” என சைருல் கூறியிருந்தார்.

எனினும் அந்தப் படுகொலை விவகாரத்தில் தாம் வெறும் கருவி மட்டுமே என அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.

“எனக்கிடப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில் செயல்பட்டேன். அல்தான்துயா கொல்லப்பட வேண்டும் என விரும்பியவர்கள் இன்னும் சுதந்திரமாகவே உள்ளனர். நான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன்,” என்று சைருல் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார்.

இந்தப் பேட்டிக் கட்டுரையில் துன் மகாதீர், சைருல் இடையேயான தொலைபேசி உரையாடல் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.