Home நாடு தாயை அடையாளம் காண பாகிஸ்தான் விரைகிறார் ஹபிபாவின் மகள்!

தாயை அடையாளம் காண பாகிஸ்தான் விரைகிறார் ஹபிபாவின் மகள்!

545
0
SHARE
Ad

helicaptor

கோலாலம்பூர், மே 10 – ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதால் மரணமடைந்த பாகிஸ்தானுக்கான மலேசிய தூதரின் மனைவி டத்தின் ஹபிபா மாஹ்முட்டின் உடலை அடையாளம் காண அவரது மகள் இஸ்லாமாபாத் விரைகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

மரபணு சோதனைக்கு உதவும் பொருட்டும் ஹபிபாவின் குடும்ப உறுப்பினர் வரவழைக்கப்படுவதாக பாகிஸ்தானுக்கான மலேசிய துணைத் தூதர் அயூப் ஓமார் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

குறிப்பிட்ட சம்பவத்தில் பலியான மலேசிய தூதர் டத்தோ டாக்டர் ஹஸ்ருல் சனி முஜ்தபார் மனைவியின் நல்லுடல் இஸ்லாமாபாத்தில் உள்ள ராணுவ மையத்திற்கு பாகிஸ்தான் ராணுவ விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார்.

“ராவல்பிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனையில் அவரது நல்லுடல் தற்காலிகமாக வைக்கப்பட்டிருக்கும்,” என்றார் அயூப் ஓமார்.

இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் பலியான நோர்வே மற்றும் ஃபிலிப்பின்ஸ் தூதர்கள் மற்றும் இந்தோனேசிய தூதரது மனைவியின் நல்லுடல்களும் இஸ்லாமாபாத் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஏழு பேரில் டத்தின் ஹபிபாவும் ஒருவர்.

அவரது உடலை மலேசியா கொண்டு செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பாகிஸ்தான் அரசு தம்மிடம் தெரிவித்துள்ளதாக துணைத் தூதர் அயூப் ஓமார் கூறினார்.

இதற்கிடையே குறிப்பிட்ட சம்பவத்தில் மலேசியத் தூதர் டாக்டர் ஹஸ்ருல் சனி காயமடைந்திருப்பதாகவும், தற்போது அவர் கில்ஜிட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

“டாக்டர் ஹஸ்ருல் சனியை மருத்துவமனை சென்று சந்திக்க முடிந்தது. அவரது முகத்திலும், கைகளிலும் ஏழு விழுக்காடு அளவிற்கு தீக்காயம்
ஏற்பட்டுள்ளது. எனினும் அவரால் பேச முடிகிறது,” என்று அயூப் ஓமார்
கூறினார்.

பாகிஸ்தான் அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக
மலேசிய தூதர், அவரது மனைவி ஹபிபா மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குறிப்பிட்ட ஹெலிகாப்டரில் சென்றனர்.

அந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக தாலிபான்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு அதை மறுத்துள்ளது.