ஆலந்தூர், மே 15 – தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி தான் சிறப்பாக இருக்கும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
“தமிழக அரசியலில் ஜாதிக்கோ, மதத்திற்கோ, மொழிக்கோ, பிராந்திய பாகுபாடுக்கோ, ஏன் அரசியல் பாகுபாடுகளுக்கோ இடம் கிடையாது. தமிழகத்தில் ஒரு நல்ல ஆட்சி ஏற்பட வேண்டும். திறமைமிக்க முதலமைச்சர் ஆளுவது தான் தமிழகத்தின் வருங்காலத்திற்கு நல்லது”.
“தற்போது உள்ள அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி தான் சிறப்பாக இருக்கும் என்று நான் ஆணித்தரமாக கருதுகிறேன். காரணம் மத்திய அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வரப்படவேண்டும்”.
“அப்படி கொண்டு வரப்படவேண்டும் என்றால் திறமையான முடிவு எடுக்க கூடிய முதலமைச்சர் கட்டாயமான தேவையாக உள்ளது. எனவே இந்த ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருப்பது தான் சரியாக இருக்கும்”.
“அரசியல் விமர்சனங்களுக்கோ, தனிநபர்களின் விமர்சனங்களுக்கோ நான் போக விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை தமிழகத்தின் இன்றைய நிலைக்கு எது தேவையோ அதுபற்றிய கருத்தை நான் ஆணித்தரமாக தெரிவித்து உள்ளேன்”.
“தற்போது பிரதமர் மோடியின் அரசு, கடந்த ஒரு ஆண்டாக நடத்துகின்ற ஆட்சி, அடித்தளத்திற்கான ஆட்சியாகும். அடித்தளத்திற்கு பின்பாக அடுத்த கட்ட பணியாக மிகப்பெரிய பலம் நிறைந்ததாக இந்தியாவை வளர்ந்து வரும் நாடுகளில் முதல் நிலை நாடாக மாற்றி காட்டப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.