வாஷிங்டன், மே 15 – அமெரிக்காவில் வசிக்கும் இந்து மக்களின் எண்ணிக்கை, கடந்த 7 ஆண்டுகளில் 0.3 சதவீதம் அதிகரித்து, 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2007ல் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில், 0.4 சதவீதமாக இந்துக்கள் இருந்தனர். இது 2014ல் 0.3 சதவீதம் அதிகரித்து, 0.7 சதவீதமாக உள்ளது. இந்த வகையில், இந்துக்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.
மொத்த மக்கள் தொகையில், முஸ்லிம்கள் 0.9 சதவீதமும், புத்த மதத்தை சேர்ந்தவர்கள் 0.7 சதவீதமும் உள்ளனர். அமெரிக்க கிறிஸ்தவர்ளை தவிர்த்து, இந்துக்களும், யூதர்களும்தான் அதிகளவு படித்துள்ளனர். அவர்களது குடும்ப வருமானமும் அதிகம்.
இந்துக்களில் 77 சதவீதம் பேரும், யூதர்களில் 59 சதவீதம் பேரும் கல்லூரி பட்டப்படிப்பை முடித்துள்ளனர். இது ஒட்டுமொத்த அமெரிக்காவில் 27 சதவீதம். இதேபோன்று, 44 சதவீத யூதர்கள், 36 சதவீத இந்துக்களின் குடும்ப வருமானம் குறைந்தது 1 லட்சம் டாலராக உள்ளது.
இது ஒட்டுமொத்த அமெரிக்கர்களில் 19 சதவீதம் என அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க மக்கள் தொகை 32 கோடி பேர் என்பது குறிப்பிடத்தக்கது.