கொழும்பு, மே 15 – இலங்கையில், உள்நாட்டு போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு, தமிழ் தேசிய கூட்டணி கட்சி சார்பில் ஒருவாரம் நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியதாவது:
“இலங்கை வடகிழக்கு மாகாணம், முல்லைத் தீவில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் 2009 மே மாதம் இறுதிப் போர் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி துவங்கியுள்ளது”.
“இது, மே 18 வரை நடைபெறும். இந்நிகழ்ச்சி, வீரமரணம் அடைந்த விடுதலை புலிகளுக்காக நடத்தப்படுவதாக கூறுவது தவறு. கடந்த 1971 மற்றும் 1987-ஆம் ஆண்டுகளில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த சிங்களர்களுக்காக ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி நினைவஞ்சலி அனுசரிக்கிறது”.
“அதுபோல், இறுதிப்போரில் இறந்த தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவது எங்கள் உரிமை” என அவர் கூறினார். இலங்கை இறுதிப் போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியாகியுள்ளதாக ஐ.நா. தெரிவித்து உள்ளது.
இலங்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதால் இறுதிப்போரில் வீரமரணம் அடைந்த விடுதலைப் புலிகளுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி வழங்குவதில்லை.