மணிலா, மே 16 – பிலிப்பைன்ஸில் உள்ள காலணித் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 72 தொழிலாளர்கள் பலியாயினர். மேலும் பலரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மணிலாவில் உள்ள தனியார் காலணித் தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட தீ, மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது.
தகவல் அறிந்ததும், மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடும் போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்த போதிலும், பலர் தீயில் பலியாகினர். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று முன்தினமும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதுவரை 72 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து பிலிப்பைன்ஸ் காவல் துறை தலைவர் லியோனார்டோ எஸ்பினா செய்தியாளர்களிடம் கூறும் போது,
“தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வெல்டிங் செய்யும் போது, இந்த தீ விபத்துக்குக் நடந்திருக்கலாம். தொழிற்சாலையில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய ரசாயன பொருட்கள் இருந்ததால் தீ வேகமாகப் பரவியிருக்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.