Home நாடு “இந்தியர் மேம்பாட்டுக்காக 11வது திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறை பொருத்தமானது” – சுப்ரா வரவேற்பு!

“இந்தியர் மேம்பாட்டுக்காக 11வது திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறை பொருத்தமானது” – சுப்ரா வரவேற்பு!

646
0
SHARE
Ad

subra-abnபுத்ராஜெயா, மே 23  –  தற்போது பிரதமரால் அறிவிக்கப்பட்டிருக்கும் 11ஆவது மலேசியத் திட்டம் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்க்கு மிகவும் பொருத்தமானது – வரவேற்கத்தக்கது என மலேசிய சுகாதார அமைச்சரும் மஇகா தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், இதற்கு முன்னதாக 2008ஆம் ஆண்டு இந்திய சமுதாயத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க ஒரு சிறப்பு அமைச்சரவை குழு அமைக்கப்பட வேண்டும் என்ற என்னுடைய பரிந்துரையைப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் அவர்கள் ஒப்புக் கொண்டார் என்றும் கூறினார்.

“அது தொடர்பான முதல் சந்திப்புக் கூட்டத்தில் இந்திய சமுதாயத்திற்குத் தொடர்புள்ள சாத்தியமான பிரச்சனைகள் அனைத்தும் முன்வைக்கப்பட்டது. அதுவே அந்தச் சிறப்பு அமலாக்கக் குழுவின் முக்கிய செயல் திட்டமாக அமைந்தது.

#TamilSchoolmychoice

அதன் அடிப்படையில், அக்குழுவின் வாயிலாக எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றத்தைப் பரிசீலிக்க ஆண்டுக்கு 2-3 முறை சிறப்பு அமலாக்கக் குழுவினர்களுடன் ஒன்று கூடிக் கலந்துரையாடலும் நடத்தப்படுகின்றது.

இந்தச் சிறப்பு அமலாக்கக் குழுவின் முடிவுகளை எளிதாக்கும் பொருட்டு பிரதமர் துறையின் கீழ் பல்வேறு பிரிவுகள் அமைக்கப்பட்டு அம்முடிவுகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது” என்றும் டாக்டர் சுப்ரா நேற்று வெளியிட்ட  பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்தார்.

“அதனைத் தொடர்ந்து, இந்தச் சிறப்பு அமலாக்கக் நடவடிக்கை குழுவின் வாயிலாக இந்திய சமுதாயத்தினரிடையே நிலவி வரும் நாடற்ற பிரச்சினைகள், வேலையில்லா பிரச்சினைகள், கல்வி வாய்ப்புகள், தொழில் திறன் பயிற்சிகள், தமிழ்ப்பள்ளி சார்ந்த பிரச்சினைகள் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது”.

“அதன் முதல் கட்டமாக இந்தியர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் கருவியாக “கோப்பராசி சூரியா” எனும் கூட்டுறவுக்கழக வாரியம் பிரதமர் அவர்களால் துவங்கப்பட்டது”.

“அதன்வழி நவீன தொழில்திறன் பயிற்சி (Atom), Tukar எனப்படும் சிறு கடைகளை உருமாற்றும் திட்டத்தின் வழி இந்தியர்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டது” என்றும் சுப்ரா தனது அறிக்கையில் விளக்கினார்.

“மேலும், பிரதமர் சீட் எனப்படும் இந்திய வர்த்தகர்களுக்கான சிறப்பு மேம்பாட்டுப் பிரிவு ஒன்றினை அமைப்பதற்கு வழிவகுத்தார்”.

“இதன்வழி, சிறிய, நடுத்தர இந்தியர்களுக்கு வங்கிகள் வழியாக ரிங்கிட் மலேசியா 150 மில்லியன் கடன் உதவி வழங்குவதற்கான வசதியை ஏற்படுத்தி, அதற்கென சிறப்புப் பிரிவு அதிகாரிகளையும் பிரதமர் நியமனம் செய்தார்”.

“குறிப்பாக இந்த “சீட்” நிறுவனத்தினருக்கு Tekun எனும் சிறுகடனுதவி வசதியை ஒருங்கிணைக்கும் பணியும் வழங்கப்பட்டது” என்றும் சுப்ரா கூறியுள்ளார்.

najipதமிழ்ப் பள்ளிகளைக் கண்காணிக்கும் செயலகம்:

“அடுத்தக்கட்டமாக, தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக கொடுக்கப்படும் நிதிகள் அனைத்தும் விரைவாகவும் திறம்படவும் செயல்படுத்தப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க பேராசிரியர் என்.எஸ். இராஜேந்திரன் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்குச் சிறப்பு பிரிவு அதிகாரியாக பிரதமர் அவர்களால் நியமிக்கப்பட்டார்”.

“மேலும், கடந்த சில ஆண்டுகளில் அரசாங்கம் இந்து கோவில்களுக்கும் இந்திய அரசு சார்பற்ற இயக்கங்களுக்கும் பெருமளவில் நிதி ஒதுக்கீடும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது”.

கொடுக்கப்பட்ட நிதிகள் அனைத்தும் பயனுள்ள வழியில் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்த கண்காணிப்புகள் இல்லாத காரணத்தால் ஒரு கண்காணிப்பு குழுவுடன் அவர்கள் எடுக்கும் திட்டங்களைப் பரிசீலிக்கவும் செயல்படுத்துவதற்காகவும் பேராசிரியர் என்.எஸ்.இராஜேந்திரன் தலைமையில் SEEDEC உருவாக்கப்பட்டது”.

“இதன்வழி இந்திய சமூகத்திற்க்குத் தேவையானவற்றைச் செயல்படுத்த பல்வேறு முடிவுகளை எடுக்கவும், நியாயமான யோசனைகளுடன் அரசாங்கம் கையாளவும் பேருதவியாக அமைந்தது” என்ற விவரத்தையும் சுப்ரா தெரிவித்துள்ளார்.

“இது போன்ற கட்டமைப்பு முயற்சிகள் அனைத்தும் இருந்தபோதிலும், சில சமூக பிரச்சினைகள் இந்திய சமுதாயத்தினரிடையே தொடர்ந்து தலைத்தூக்கிக் கொண்டு, தொடர்ந்து இருந்து வருகின்றன”.

“இதனை முறைப்படி கண்காணிப்பது அவசியமாகும்.  இந்திய சமுதாயத்தின் குறைப்பாட்டினால் இன்று செயல்பட்டு வரும் திட்டங்கள் திறன் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற எனது பரிந்துரையை, 11வது மலேசியத் திட்டம் அறிவிப்பதற்கு மூன்று வாரத்திற்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவையில் வழங்கியிருந்தேன்”.

“இது குறித்து கடந்த வாரம் நான், பிரதமர் அவர்களைச் சந்தித்து தற்பொழுது அமல்படுத்தி வரும் திட்டங்களில் உள்ள பலவீனங்களையும் அதற்குத் தேவையான சாத்தியமான தீர்வுகள், பரிந்துரைகள் குறித்தும் அவரிடம் கலந்துரையாடினேன்” என சுப்ரா தனது அறிக்கையில் விளக்கியுள்ளார்.

டாக்டர் சுப்ரா தனது அறிக்கையில்  மேலும் கூறியிருப்பதாவது:

“ஒரு வலுவான அரசாங்க கொள்கை அமலாக்கங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால், இத்திட்டங்கள் அனைத்தும் தனித்தனி அதிகாரிக்கு உட்பட்ட நிர்வாக முறை இருக்க வேண்டும்”.

“அதன் அடிப்படையில் பிரதமர் அவர்கள் அறிவித்திருக்கும் இந்திய சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தை நான் முழு மனத்துடன் வரவேற்கிறேன்”.

“எனவே, சமூக அமைப்புகள் அனைத்தும் தங்களது நிர்வாக நடவடிக்கைகளை, நியமிக்கப்பட்டுள்ள அனைத்துப் பிரிவுகளின் தொடர்புடைய நிறுவனங்களிடம் ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும்”.

“இவற்றில் ஏதாவது இடையூறுகள் இருப்பின், அவற்றை ஆக்ககரமான முறையில் மேற்கொள்ளப்படுவதற்குரிய இறுதி முடிவினை அமைச்சரவையின் சிறப்பு நடவடிக்கைக் குழு கையாளும்”.

“இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் இந்திய சமுதாயம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் சிறந்ததோர் அடைவுநிலையை வழங்கியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது”.

“குறிப்பாக, தமிழ்ப்பள்ளிகளின் வெற்றிகரமான மேம்பாடுகள், நூற்றுக்கணக்கான மில்லியன் செலவில் வழங்கப்பட்ட தெக்கூன் கடன் வசதி, 5000க்கும் மேற்பட்டவர்களுக்குக் குடியுரிமை அடையாளம் என இன்னும் பல திட்டங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்”.

“அதன் அடிப்படையில், இன்னும் குறுகிய காலக்கட்டத்தில் புதிய அணுகுமுறைகளுடன் இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளைக் கண்டறிந்து முழு தீர்வுகள் கையாளப்படும்”.

“சமூக இயக்கங்கள் தொடர்ந்து மேல்நோக்கிச் செல்வதை உறுதிப்படுத்த செயலிழந்து காணப்படும் இயக்கங்களுக்கு உயிர்கொடுக்க சமூக ரீதியில் ஆக்ககரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

“எனவே, நமது பலம், பலவீனங்களை முன்வைத்து, கடந்த 5 ஆண்டுகளில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், அதனை எதிர்கொள்ள கையாளப்பட்ட முடிவுகள் அனைத்தையும் திரும்பிப் பார்க்கும் போது, அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு வலுவான திட்டங்களை வகுக்க புதிய 11வது திட்டம் அதற்குரிய அணுகுமுறைகளும் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது” என அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.