ஜோர்ஜ் டவுன், மே 28 – ரோஹின்யா அகதிகளை பினாங்கில் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் உதவுமாறு உத்தரவு வந்தால் அதன்படி செயல்பட தயாராக இருப்பதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இதுவரை எத்தகைய உத்தரவும் வரவில்லை என பினாங்கு காவல்துறை மூத்த தலைமை துணை ஆணையர் டத்தோ வீரா அப்துல் ரகிம் தெரிவித்தார்.
“புக்கிட் அமானில் இருந்து தகுந்த உத்தரவு வரும் வரை காத்திருப்போம். பினாங்கில் ரோஹின்யாக்கள் எத்தகைய குற்றங்களிலும் ஈடுபட்டதில்லை. இங்கு நான் தலைமை காவல் அதிகாரியாக செயல்பட்டு வரும் இக்காலத்தில் அத்தகைய தகவல் ஏதும் வந்ததாக எனக்குத் தெரியவில்லை,” என்றார் வீரா அப்துல் ரகிம்.
அகதிகள் விவகாரத்தை அரசியலாக்காதீர்கள்: லிம் குவான் எங்
இதற்கிடையே ரோஹின்யா அகதிகளை பினாங்கில் குடியமர்த்துவது தொடர்பாக அம்மாநில அரசு தேவையின்றி தாக்கப்பட்டு, விமர்சிக்கப்படுவதாக மாநில முதல்வர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மாநில அரசுடன் இணைந்து செயல்பட மத்திய அரசு விரும்புவதில்லை என்பது தெளிவாகிறது என்று அவர் கூறியுள்ளார்.
“இதுவரை உள்துறை அமைச்சிடமிருந்து எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. எனவே இப்போது முதல் எந்தக் கேள்வியாக இருந்தாலும் அது உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹமிடியிடம் தான் கேட்கப்பட வேண்டும். ரோஹின்யா அகதிகளை குடியமர்த்த கெடா மாநிலம் விரும்பவில்லை. ஆனால் இதற்காக அம்மாநிலத்தை யாரும் விமர்சிக்கவில்லை.
“இந்த விவகாரத்தை மத்திய அரசு கையாள்வதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் தேவையின்றி இதை அரசியலாக்க வேண்டாம்,” என்றார் லிம் குவான் எங்.