கோலாலம்பூர், ஜூன் 2 – தனது குறுகிய கால விடுமுறையை ஆஸ்திரேலியாவில் கழித்து விட்டு இன்று இரவு நாடு திரும்பவுள்ள துணைப் பிரதமர் மொகிதின் யாசினை விமான நிலையத்தில் வரவேற்க, கூடவிருக்கும் மிகப் பெரிய ஆதரவாளர்கள் கூட்டம் அம்னோவில் ஏற்பட்டுள்ள பிளவை வெளிப்படையாகக் காட்டும் என அரசியல் ஆய்வாளரான அஸ்பான் அலியாஸ் தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கேஎல்ஐஏ இன்று இரவு மிகப் பெரிய அளவிலான கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துணைப்பிரதமர் அலுவலகத்திலிருந்து குறுஞ்செய்தி, டிவிட்டர், வாட்ஸ்அப் வழியாக அம்னோ உறுப்பினர்களுக்கு நேற்று முதல் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருவதாகவும், இன்று இரவு 9 மணிக்கு மொகிதின் மலேசியாவிற்குத் திரும்புவார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அஸ்பான் தெரிவித்துள்ளார்.
அந்த அழைப்பிதழுக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைக்குமானால், அம்னோவில் அதிகாரப்பூர்வமாக இன்று இரவே பிளவு தொடங்கிவிடும் என்றும் அஸ்பான் ஆரூடம் கூறியுள்ளார்.
1எம்டிபி விவகாரத்தில் தனக்கு ஆதரவாக இல்லாத அமைச்சர்கள் பதவி விலகிக்கொள்ளலாம் என கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்த போதே, மொகிதினின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று மக்கள் மத்தியில் ஆர்வம் கூடிவிட்டது. அந்த கூட்டத்தில் மொகிதின் இல்லாமல் இருந்தது அவர் 1எம்டிபி விவகாரத்தில் உடன்படாமல் இருப்பது தெளிவாகத் தெரிகின்றது என்றும் கூறப்படுகின்றது.
அதேவேளையில், அண்மையில் 1எம்டிபி விவகாரத்தில் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று மொகிதின் யாசின் கூறியதாக சொல்லப்படும் காணொளி ஒன்றும் இணையத்தில் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.