சென்னை. ஜூன் 5- பூசாரி நாக முத்துவைத் தற்கொலைக்குத் தூண்டியது, பொதுப்பணித்துறையில் இருந்து கொண்டு மக்களுக்குத் துன்பம் விளைவித்தது போன்ற பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், ஊழல், லஞ்சம் போன்ற சில பிரிவுகளிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ராஜாவுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது.
இதில் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் மட்டும் அவர் முன் பிணை( ஜாமீன்) பெற்றுள்ளார். மற்ற பிரிவுகளில் இன்னும் முன் பிணை பெறவில்லை.
மற்ற வழக்குகளிலும் முன் பிணை பெற அவர் முயன்று வருவதால், அவர்மீது எந்தெந்தப் பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்பதைக் காவல்துறையினர் ரகசியமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், வரும் 26 ஆம் தேதி நீதிமன்றத்தில் தோன்ற (ஆஜராக) அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இருப்பினும், அதற்கு முன்னதாக அவரைக் கைது செய்யவும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
இந்த இக்கட்டான நிலையில் தம்பியை ஓ.பன்னீர்ச்செல்வம் கை கழுவி விட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது தொடர்பாகத் தேனி மாவட்ட அதிமுக-வினரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:
“தம்பியைக் காப்பாற்ற முயற்சிக்காத ஓ.பன்னீர்ச் செல்வம் மகனை முன்னிறுத்திப் பல காரியங்களைச் செய்து வருகிறார். இதனால் கட்சியினருக்கு அதிக வருமானம் வருகிறது.
எனவே,கட்சியினர் அவரது மகன் ரவீந்திரநாத் பக்கம் அணி வகுத்து நிற்கின்றனர்.இப்போது ராஜா தனித்து விடப்பட்டிருக்கிறார்.
அவர் எப்படி இந்த இக்கட்டான கட்டத்திலிருந்து மீண்டு கரையேறப் போகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது”என்றனர்.