Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர் ஆசியாவின் இந்தியா முதலீட்டுத் திட்டத்திற்கு இந்திய விமானத் துறை அமைச்சு தடை?

ஏர் ஆசியாவின் இந்தியா முதலீட்டுத் திட்டத்திற்கு இந்திய விமானத் துறை அமைச்சு தடை?

1050
0
SHARE
Ad

air-asia-logo-Sliderபுதுடில்லி, மார்ச் 6 – மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ஏர் ஆசியாவின் இந்திய மண்ணில் வர்த்தகத் தடம் பதிக்கும் திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.

டாட்டா நிறுவனத்துடன் கூட்டு வாணிகத் திட்டமாக இந்தியாவில் மலிவு விலை புதிய விமான நிறுவனத்தைத் தொடக்கும் ஏர் ஆசியாவின் திட்டத்திற்கு இந்தியாவின் விமான சேவை அமைச்சு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றது.

விமான நிறுவனங்களுக்கான புதிய வெளிநாட்டு முதலீட்டு சட்டதிட்டங்கள் ஏற்கனவே இந்தியாவில் இயங்கி வரும் விமான நிறுவனங்களுக்குத்தான் பொருந்தும் என்றும் புதிதாகத் தோற்றுவிக்கப்படும் விமான நிறுவனங்களுக்கு இந்த புதிய வெளிநாட்டு முதலீட்டு சட்டதிட்டங்கள் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஏர் ஆசியாவின் இந்திய பங்குதாரரான டாட்டா நிறுவனம் சமர்ப்பிக்கும் திட்டத்தை விவாதிக்கவிருக்கின்றது.

புதிய நிறுவனம் முதலில் அமைக்கப்பட்டு அதன் பின்னர்தான் அதன் வெளிநாட்டு முதலீட்டு சட்டதிட்டங்கள் நடைமுறைக்கு வரும் என்பதால் இந்திய விமானத் துறை அமைச்சு ஏர் ஆசியா தற்போது முன்மொழிந்துள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஏர் ஆசியாவின் தலைமை செயல் முறை அதிகாரியும் முக்கிய பங்குதாரருமான டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தனது இந்திய விமான நிறுவனத்தை மே அல்லது ஜூன் மாதத்திற்குள் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

விமான சேவை அமைச்சர் அஜித் சிங்கும் இந்த திட்டம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். டாட்டா நிறுவனம் தாங்களாகவே முன்வந்து சொந்த விமான நிறுவனத்தை தொடங்கியிருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்று அஜித் சிங் கூறியிருந்தார்.

வெளிநாட்டு விமான நிறுவனம் இந்தியாவில் 49 சதவீத முதலீட்டை செய்யும் சலுகையானது இந்தியாவில் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் விமான நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் புதிய விமான நிறுவனத்திற்கு இந்த சலுகையை அனுமதிக்க முடியாது என்றும் இந்திய விமான சேவை அமைச்சின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் டாட்டா நிறுவனத்தின் மூத்த தலைவரான ரத்தன் டாட்டா இந்த திட்டம் குறித்து விமானத்துறை அமைச்சருடன் இந்த வாரத்தில் விவாதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில் தனது கூட்டு இந்திய விமான நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல்முறை அதிகாரியைத் தேர்ந்தெடுத்து விட்டதாகவும் டோனி பெர்னாண்டஸ் அறிவித்துள்ளார்.

“சென்னையைச் சேர்ந்த ஒரு திறமையான இளைஞரை ஏர் ஆசியா இந்திய விமானத் திட்டத்திற்கு நான் தேர்ந்தெடுத்துள்ளேன். திறன்கள் பல வாய்ந்தவர். எல்லாரையும் அவர் கவர்வார்” என டோனி பெர்னாண்டஸ் தனது ட்விட்டர் குறுந்தகவலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் யார் என்பதை டோனி பெயர் குறிப்பிடவில்லை.

-பெர்னாமா