Home உலகம் உலகில் முதல் முறையாக மண்டை ஓடு அறுவைச் சிகிச்சை-அமெரிக்கா சாதனை!

உலகில் முதல் முறையாக மண்டை ஓடு அறுவைச் சிகிச்சை-அமெரிக்கா சாதனை!

562
0
SHARE
Ad
mandai
ஹூஸ்டன், ஜூன்6- உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் மண்டையோடு  மாற்று அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. புற்று நோயாளி ஒருவருக்கு நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சை வெற்றி அடைந்துள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் பாய்சன் (வயது 55). சாப்ட்வேர் வல்லுநர்.

இவர் ‘லீயோமியோசர்கோமா’ என்ற ஒரு அபூர்வ வகைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்கு அவருக்கு கதிரியக்க சிகிச்சை அளித்திருக்கிறார்கள். இந்தச் சிகிச்சையின் காரணமாக அவரது மண்டையோடு பெரிதும் பாதிக்கப்பட்டது.

அவருக்கு ஹூஸ்டன் ஆன்டர்சன் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஹூஸ்டன் மெத்தடிஸ்ட் மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் மண்டையோட்டைப் பிளந்து  உச்சந்தலை மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு எடுத்தனர்.

அதன்படி அவருக்குக்  கடந்த 22-ந் தேதி மண்டையோடு மற்றும் உச்சந்தலை மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

#TamilSchoolmychoice

மண்டையோடு மற்றும் உச்சந்தலை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள டாக்டர் குழுவுக்குத்  தலைமை வகித்த டாக்டர் மைக்கேல் கீபக், ஹூஸ்டனில் இது தொடர்பாக நேற்று முன்தினம் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

 “ஜேம்ஸ் பாய்சனுக்குச் செய்த அறுவைச் சிகிச்சை மிகவும் சிக்கலானது. மைக்ரோ சர்ஜரி என்ற நுண்ணிய அறுவைச் சிகிச்சை மூலமாகத் திசுக்களையெல்லாம் மாற்றி இருக்கிறோம். உச்சந்தலையில், முடிக்கு அடியில் அழிந்துபோன மண்டை எலும்பினைப்  பொருத்தினோம்.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவருக்கு உணர்வு திரும்பி உள்ளது. இது மிகவும் சிறப்பானது. பொருத்தப்பட்டுள்ள உச்சந்தலையில் வியர்ப்பதை நீங்கள் பார்க்கலாம்.
ஒரே நேரத்தில் மண்டையோடு, சிறுநீரகம், கணையம் மாற்று அறுவை சிகிச்சைகள் யாருக்கும் நடந்ததாகத் தகவல் இல்லை.” என்றார்.

எனவே ,இது உலகின் முதலாவது மண்டையோடு மற்றும் உச்சந்தலை மாற்று அறுவைச் சிகிச்சை என்ற சிறப்பைப் பெறுகிறது.

மெத்தடிஸ்ட் மருத்துவமனைப் படுக்கையில் இருந்தவாறு ஜேம்ஸ் பாய்சன்: “நான் இப்போது இந்தளவுக்கு நலமாக இருக்கிறேன் என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது.

இது ஒரு வகையான இன்ப அதிர்ச்சியை எனக்கு அளித்தது. நான் நேசிக்கிற மக்களுடன் மீண்டும் வழக்கமான வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனக்கு இந்த உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளைச் செய்த டாக்டர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.