Home நாடு சபா நிலநடுக்கத்தால் 6 மாவட்டங்களில் 23 பள்ளிகளுக்கு பாதிப்பு: மொய்தீன்

சபா நிலநடுக்கத்தால் 6 மாவட்டங்களில் 23 பள்ளிகளுக்கு பாதிப்பு: மொய்தீன்

591
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 6 – வெள்ளிக்கிழமை அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சபாவில் உள்ள 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 பள்ளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் தெரிவித்துள்ளார்.

இவற்றுள் 16 தொடக்கப் பள்ளிகளும், 6 இடைநிலைப் பள்ளிகளும் அடங்கும் என அவர் கூறியுள்ளார். இந்தப் பள்ளிகள் ரனாவ், துவாரன், கோத்தா பெலுட், பெனாம்பங், நபாவான் மற்றும் கெனிங்காவ் பகுதிகளைச் சேர்ந்தவையாகும்.

MUHYIDDIN_PPAUH (1)

#TamilSchoolmychoice

“பள்ளிகளுக்கு விடுமுறைக் காலம் என்பதால் யாரும் காயம் அடைந்ததாகவோ, உயிர் இழந்ததாகவோ தகவல் இல்லை. பள்ளிக் கட்டடங்கள், ஆசிரியர்களின் குடியிருப்புகள், பள்ளி வளாகத்தில் உள்ள சாலை மற்றும் நிலப் பகுதிகள் சேதம் அடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

“மாநில கல்வித்துறை சார்பாக இச்சேதங்களை சீரமைப்பதற்கு போதுமான நிதி ஒதுக்கப்படும். சீரமைப்புப் பணிகள் காரணமாக பள்ளி நடவடிக்கைகள் பாதிக்கப்படாது,” என்று மொய்தீன் தெரிவித்துள்ளார்.

சேதம் அடைந்த பள்ளிக் கட்டடங்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு முன் அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா என்பதை பொதுப் பணித்துறை ஆய்வு செய்யும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒட்டுமொத்த சேத விவரங்கள் குறித்து மாநில அரசின் அறிக்கைக்காக காத்திருப்பதாகக் கூறினார்.

“தேவை ஏற்படின் ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிக்கு தற்காலிகமாக அனுப்பப்படுவர். நிலநடுக்கம் மிகுந்த வருத்தத்தை தந்துள்ளது. மீட்புப் பணிகளை நீடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அச்சமடையத் தேவையில்லை. அனைவரும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். நிலநடுக்கம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும் என தேசிய பாதுகாப்பு மன்றத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான மொய்தீன் மேலும் தெரிவித்துள்ளார்.