கோலாலம்பூர், ஜூன் 7 – பிரதமர் நஜிப் துன் ரசாக் சவுதி அரேபியாவுக்கு மேற்கொண்டுள்ள 3 நாள் அதிகாரப்பூர்வ பயணத்தில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி, தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஆகிய இருவரும் இணைந்துள்ளனர்.
பிரதமர் நஜிப்புடன் அம்னோவின் 3 உதவித் தலைவர்களில் இருவர் இந்தப் பயணத்தில் உடன் சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சாஹிட் ஹமிடி, ஹிஷாமுடின் இருவரும் ஏற்கெனவே சவுதி அரேபியா சென்றுவிட்ட நிலையில், பிரதமர் நஜிப் நேற்று சனிக்கிழமை இரவு அங்கு சென்றடைந்துள்ளார்.
இதற்கிடையே அம்னோவின் மூன்றாவது உதவித் தலைவரான, கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் ரஷ்யா மற்றும் ஜெர்மனிக்கு திங்கட்கிழமை அன்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
கடந்த சில நாட்களாக பிரதமர் நஜிப் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில் அவருடன் ஹமிடியும் ஹிஷாமுடினும் இணைந்து பயணம் மேற்கொண்டிருப்பது அரசியல் அரங்கில் கவனிக்கத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
சவுதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகளை தாம் சந்தித்துப் பேசியதாக தனது டுவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார் ஹிஷாமுடின்.
இதற்கிடையே நஜிப், ஹமிடி, ஹிஷாமுடின் மற்றும் மலேசிய பேராளர்கள் அனைவரும் இணைந்து சவுதி அரேபியாவில் உம்ரா (umrah) மேற்கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.
சவுதி அரேபிய மன்னர் விடுத்த அழைப்பின் பேரில் அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் நஜிப்.