Home நாடு மலைச்சிகரம் கண்முன்னே மாயமானது: அனுபவத்தை விவரிக்கும் கினபாலு பூங்கா ஊழியர்

மலைச்சிகரம் கண்முன்னே மாயமானது: அனுபவத்தை விவரிக்கும் கினபாலு பூங்கா ஊழியர்

600
0
SHARE
Ad

கோத்தகினபாலு, ஜூன் 7 – சபா நிலநடுக்கம் ஏற்பட்டபோது சில நொடிகளுக்கு கினபாலு மலைச் சிகரம் தன் கண் முன்னே மாயமானதாக கினபாலு பூங்காவின் சுமைதூக்கும் ஊழியரான (போர்ட்டர்) ஃபிர்டாஸ் அப்துல் சலாம் கூறுகிறார்.

அன்றைய தினம் காலை பூங்காவின் வாயிற்கதவுகள் திறக்கப்படுவதற்காக தாம் காத்திருந்ததாகவும், அச்சமயம் நில அதிர்வை உணர்ந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.

Mt-Kinabalu-Summit“காலை 7.30 மணி இருக்கும். சக ஊழியர்களுடன் மலைச்சிகரத்தின் அடிவாரத்தில் இருந்தேன். அப்போது நிலநடுக்கம் ஏற்பட்டது. என்ன நடந்தது என்பதை அறிவதற்குள் கினபாலு மலைச்சிகரம் கண் முன்னே மாயமானது. வெறும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. நிலநடுக்கத்திற்கு முன்னே வெடிச்சத்தம் போல் பெரும் சத்தம் கேட்டது,” என்கிறார் ஃபிர்டாஸ்.

#TamilSchoolmychoice

வெடிச் சத்தத்திற்குப் பின்னர் அனைவரும் மலைச் சிகரத்தை நோக்கியதாக குறிப்பிடும் அவர், தங்களால் அச்சமயம் எதையும் பார்க்க முடியவில்லை என்றார்.

“முன்னதாக நாங்கள் இருந்த குடிசையை விட்டு அனைவரும் வெளியேறினோம். ஏனெனில் மரங்களால் ஆன அந்த குடில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என அஞ்சினோம். மேலும் மலையடிவாரப் பகுதி என்பதால் எங்களது அச்சம் அதிகரித்தது,” என்கிறார் ஃபிர்டாஸ்.

முதல் நில அதிர்வு சுமார் 30 விநாடிகள் நீடித்ததாக குறிப்பிடும் அவர், தான் அதிர்ச்சியில் மூழ்க இந்த கால அவகாசமே போதுமானதாக இருந்தது என்கிறார்.

“எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக எனது பணிக் கடமையிலிருந்து பின்வாங்க மாட்டேன். கடந்த 1997ஆம் ஆண்டு முதல் இந்தப் பணியைத் தான் செய்து வருகிறேன். ஒரே ஒரு நிலநடுக்கம் எனது வாழ்வாதாரத்தைப் பாதிக்க அனுமதிக்கப் போவதில்லை,” என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் ஃபிர்டாஸ்.