கோலாலம்பூர், ஜூன் 12 – கோத்தா கினபாலு நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்கச் சென்ற பிகேபிஎஸ் குழுவினர், நிதியுதவி அளித்த பின்னர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில், ‘மர்ம கைகள்’ தெரிந்தது நட்பு ஊடகங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பிகேபிஎஸ் (Persatuan Komuniti Bugis Sabah) உதவித் தலைவர் சமசுதின் யூசோப் கூறுகையில், “நிறைய பேர் அந்த புகைப்படம் குறித்து எங்களிடம் கேட்டார்கள். ஆனால் அது மர்ம கைகளா அல்லது கேமராவின் கோளாறா என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
(நிலநடுக்கத்தில் காயமடைந்த சிங்கப்பூர் மாணவரை முதுகில் சுமந்து வந்து காப்பாற்றிய மலையேற்ற வழிகாட்டி ரிட்சுவானுக்கு அன்பளிப்பு வழங்கும் அம்போட்டோலா மற்றும் குழுவினர்)
புகைப்படத்தில் கருப்பு நிற மர்மக் கைகள் தெரிவதற்கு அருகில் நிற்பவரின் பெயர் மிஸ்பாஹுதின் ரிதா.
அவர் இது குறித்து கூறுகையில், அது தனது கைகள் இல்லை என்றும், அந்தக் கைகள் தனது கைகளை விட மிகவும் கருமை நிறத்தில் இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த மர்மக் கைகள் நிக்கான் கேமராவில் எடுத்த படத்திலும், போன் மூலமாக எடுத்தப் படத்திலும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.