Home நாடு “பழனிவேல் இல்லையென்றால் தே.மு.வுக்கு இந்திய வாக்குகள் கிடைக்காது”- ஜோகூர் பாலாவின் வாதம் நியாயமா?

“பழனிவேல் இல்லையென்றால் தே.மு.வுக்கு இந்திய வாக்குகள் கிடைக்காது”- ஜோகூர் பாலாவின் வாதம் நியாயமா?

605
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 21 – டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் நேற்று நடைபெற்ற ஆதரவுப் பேரணியில், பேசிய ஜோகூர் மாநிலத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் அதிரடியாக ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கின்றார்.

Palanivel-Balakrishnan-PWTC Palanivel meeting-தேசியத்தலைவர் பழனிவேல் மிகவும் நல்லவர், நேர்மையானவர் என்று குறிப்பிட்ட பாலகிருஷ்ணன், மஇகாவிற்கு இப்படி ஒரு தேசியத்தலைவர் தான் வேண்டும் என்று தெரிவித்தார்.

ஒருவேளை இந்தத் தலைவர் வரவில்லை என்றால், அடுத்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு இந்தியர்கள் வாக்குகள் சரியும், தேர்தலில் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்றும்  கூறியிருக்கின்றார் பாலகிருஷ்ணன்.

#TamilSchoolmychoice

இந்தத் தகவலைப் பிரதமருக்குக்  கொண்டு சென்று சேர்க்கும் படி அங்கிருந்த செய்தியாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

யோசித்துப் பார்த்தால், இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாக இதுதான் இருக்கும்.

காரணம், பழனிவேல் தலைமையின் கீழ், மஇகா அதலப் பாதாளத்திற்குப் போய்விட்டது என மஇகாவின் மூத்த புள்ளிகளும், முக்கியத் தலைவர்களும் ஒருபுறம் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

தேசியத் தலைவராகப் பதவியேற்றது முதல் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய சமுதாயத்திற்கென முறையான திட்ட வரைவு இல்லை – செயல் நடவடிக்கைகள் இல்லை – தேசிய முன்னணிக்கு ஆதரவாக இந்தியர் வாக்குகளைத் திசை திருப்புவது குறித்த முறையான திட்டம் இல்லை – எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலில் மஇகாவின் இலக்குகள் என்ன – இப்படி எல்லா வகையிலும் ஏற்கனவே மஇகாவுக்கு இந்தியச் சமுதாயத்தில் இருந்த செல்வாக்கைக் குலைத்தது ஒன்றுதான் பழனிவேலுவின் சாதனையாக இருக்கின்றது.

ஏற்கனவே இருந்த இந்தியர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் பழனிவேலுவின் தலைமைத்துவத்தில் மஇகா தடுமாறிக் கொண்டிருக்கின்றது என்பதுதான் பெரும்பான்மை அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கின்றது.

இந்நிலையில், பழனிவேலுக்குப் பதிலாகப் புதிய தலைமைத்துவத்தைப் பெற்றால்தான் மஇகா தலைநிமிர முடியும் – அடுத்த கட்டத்திற்குக் காலடி எடுத்து வைக்க முடியும் என்ற நிலையில்,

பழனிவேல் தலைவராகத் தொடராவிட்டால் இந்திய வாக்குகளைத் தேசிய முன்னணி இழந்து விடும் எனப் பிரதமருக்கே சொல்லுங்கள் எனச் சவால் விடும் டான்ஸ்ரீ பாலகிருஷ்ணனின் பேச்சு –

உண்மையிலேயே சிரிப்பை வரவழைக்கும் இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவைதான்!