கோலாலம்பூர், ஜூன் 23 – இஸ்லாம் அல்லாத மாணவர்களையும், பெற்றோர்களையும் புண்படுத்துவது போலான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியரைத் துணைக் கல்வி அமைச்சர் பி.கமலநாதன் கண்டித்துள்ளார்.
சிறுநீரைப் பருகுங்கள் என்று அந்த ஆசிரியர் வேடிக்கையாகக் கூறியது என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறியுள்ள கமலநாதன், குறிப்பாக மாணவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஆசிரியர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், அது போன்ற வார்த்தைகள் மாணவர்களிடத்தில் தவறான ஒரு முடிவை ஏற்படுத்தும் என்பதை அறிந்தும் அந்த ஆசிரியர் அவ்வாறு கூறியுள்ளார் என்றும் கமலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கெடா மாநிலம் சுங்கைப் பட்டாணியில் உள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றில், இஸ்லாம் அல்லாத மாணவர்களை வகுப்பில் தண்ணீர் அருந்தக்கூடாது என்று கூறிய அந்த ஆசிரியர், அவரவர் சிறுநீரைப் பருகும்படியும் கூறியுள்ளார்.
இதனால் கொதித்தெழுந்த அம்மாணவர்களின் பெற்றோர் இந்த விவகாரம் குறித்துக் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஆசிரியரும் தனக்குத் தொலைபேசியில் கொலைமிரட்டல்கள் வருவதாகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணை செய்து, தக்க நடவடிக்கை எடுக்கும் என்றும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது என்றும் கமலநாதன் தெரிவித்துள்ளார்.