நெல்லை, ஜூன் 23 – நெல்லை மாவட்ட ஆட்சியாளர் (கலெக்டர்) அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது 37), ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவருக்குத் தொலைபேசிச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு வந்த அவர், மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு திடீரென்று உண்ணாவிரதம் இருக்கும் முயற்சியில் இறங்கினார்.
உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் விரைந்து வந்து வெங்கடேசை முன் எச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தனர்.
தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக வெங்கடேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
நீண்ட நேர விசாரணைக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
உண்ணாவிரதம் இருக்க முயன்றதற்கான காரணம் குறித்துக் கேட்டபோது:
“விக்கிரமசிங்கபுரம் நகரசபையில், 4 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் சமீபத்தில் நிரப்பப்பட்டுள்ளன. அது முறையான நியமனம் அல்ல: அதற்குப் பணம் கைமாறி இருக்கிறது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியாளர் மற்றும் அதிகாரிகளுக்குப் பலமுறை மனுக்கள் அனுப்பியும்,அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியே உண்ணாவிரதம் இருக்க முயன்றேன்” என்றார்.
இந்த வெங்கடேஷ் ஏற்கனவே நெல்லை பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.