கராச்சி, ஜூன் 24 – பாகிஸ்தானில் உக்கிரமான வெயிலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 692-ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான வெப்பநிலை உள்ளது.
இன்று காலை நிலவரப்படி சிந்து மாகாணத்தில் ஒட்டுமொத்தமாகச் சுமார் 700 பேர் பலியாகி உள்ளனர். மாகாணத் தலைநகர் கராச்சியில் பெரும்பாலான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பலர் வெயில் தொடர்பாக ஏற்படும் காய்ச்சல், உடல் வறட்சி மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் மட்டும் 400 பேர் பலியாகியுள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளில் வெப்பப் பக்கவாதம், உடல் சோர்வு மற்றும் குறைந்த ரத்தஅழுத்தம் காரணமாக மேலும் பலர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களில் மட்டும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 27,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கராச்சியில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சிந்து மாகாணத்தில் உள்ள அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.