பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24 – ரனாவ் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று ஒரு நாளில் மட்டும் நான்கு முறை நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “4.3 ரிக்டர் அளவுள்ள நிலஅதிர்வு ரனாவ் பகுதியில் நேற்று உணரப்பட்டது. இந்த நிலஅதிர்வின் தாக்கம் ரனாவின் 10 கி.மீ பகுதிகளிலும், சபாவிலும் எதிரொலித்தது” என்று அறிவித்துள்ளது.
கோத்தா கினபாலு, கோத்தா பெலுட் வாசிகளும் இந்த நில அதிர்வை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
வானிலை ஆய்வுத் துறையின் தகவல்படி, நேற்று மாலை சுமார் 5.30 அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும், 6.26 மணியளவிலும், 6.39 மணியளவிலும் கட்டிடங்கள் அசைந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே சமயத்தில் இந்தப் பகுதிகளில் மேலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் புவியியல் பேராசிரியர் பெலிக்ஸ் எச்சரித்துள்ளார்.