Home நாடு தவறான வார்த்தைகளைப் பிரயோகித்த ஆசிரியரின் செயலுக்குச் சுப்ரா கண்டனம்!

தவறான வார்த்தைகளைப் பிரயோகித்த ஆசிரியரின் செயலுக்குச் சுப்ரா கண்டனம்!

613
0
SHARE
Ad

subra-health-dentists-1கோலாலம்பூர், ஜூன் 24 – “சுங்கைப் பட்டாணி இப்ராஹிம் தேசிய ஆரம்பப் பள்ளி மாணவர்களின் விவகாரம் பிரிவின் துணைத் தலைமையாசிரியர் முஸ்லீம் அல்லாத மாணவர்களை நோன்பு மாதத்தில் தண்ணீர் அருந்துவதென்றால் கழிவறையில் சென்று அருந்தும்படியும், அப்படிக் கழிவறையில் சென்று அருந்தும்பொழுது சிறுநீரை அருந்திவிடாதீர்கள் என்று முட்டாள்தனமான ஒரு கூற்றை மாணவர்களிடம் அறிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.இம்மாதிரியான ஆசிரியர்கள் கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும்” என அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்கள் தமது பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

“சம்மந்தப்பட்ட அந்த ஆசிரியர் விசாரணையில் தெரிவிக்கும் போது தாம் நகைச்சுவையாகவே அவ்வாறு கூறியதாகத் தெரிவித்துள்ளது ஆசிரியர் தொழிலுக்கு முரண்பாடான ஒரு செயலாகும்.இம்மாதிரியான கூற்று சம்மந்தப்பட்ட ஆசிரியருக்கு வேண்டும் என்றால் நகைச்சுவையாகத் தெரியாலாம். ஆனால், உணர்ச்சி அடிப்படையில் இது இனவாதத்தைத் தூண்டக்கூடிய ஒரு செயல் என்று படித்த ஆசிரியருக்குத் தோன்றவில்லையா? மாணவர்களைக் கழிவரையில் சென்று நீர் அருந்தச் சொன்னதே மிகப் பெரிய தவறு. அதிலும் தவறுதலாகச் சிறுநீரை அருந்தி விடாதீர்கள் என்று கூறுவது அறிவிலித்தனமான பேச்சாகும்.”

#TamilSchoolmychoice

“ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களை வழிநடத்தும் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள். அவர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் பொறுப்பும் கடமையும் அவர்களுக்குப் போதிப்பவர்களுக்கு நிறையவே உண்டு. ஆனால் அதற்கு மாறாக மாணவர் சமூகத்தினரிடையே வேற்றுமையை உருவாக்கும் வகையிலும் இனவாதத்தைத் தூண்டும் ஆசிரியர்கள் நடந்து கொள்வது பொறுப்பற்ற செயல் என்றும் அவர்கள் நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கக் கையாண்டு வரும் தன்மூப்பான செயலும் ஆகும்.”

“ஆசிரியர் தொழில் என்பது மிகவும் புனிதமான ஒரு தொழிலாகும். அத்தகைய தொழிலுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் மாணவர்களிடம் நடந்து கொள்வதும், நாவடக்கம் இன்றிக் கொச்சையான முறையில் பேசுவதும் வரம்பு மீறிய ஒரு செயலாகும். தங்களின் பேச்சில் ஒரு கட்டுப்பாட்டினையும், நன்னெறிக் கோட்பாடுகளையும் கடைப்பிடிக்கத் தவறுபவர்கள் எப்படி நற்சிந்தனை நிறைந்த மாணவர்களை உருவாக்கப் போகிறார்கள். இவ்வாறு நடந்து கொள்பவர்கள், ஆசிரியர் எனும் புனிதமான தொழிலுக்குக் கொஞ்சம் கூட தகுதியற்றவர்கள்”

“கல்வியமைச்சு இத்தகைய ஆசிரியர்கள் மீது பாராபட்சமின்றி கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பள்ளியில் நடக்கும் இனவாதப் பிரச்சனைகளைக் கல்வியமைச்சு ஏனோ தானோ என்று அலட்சியமாகக் கையாள்வதும், அது குறித்து நொண்டிச் சாக்குகளையும் அறிவுக்கு ஒவ்வாத காரணங்களையும் சொல்லித் தட்டிக் கழிப்பதனாலேயே இது போன்ற இனவாதச் செயல்களைக் புத்திகெட்ட ஒரு சில ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிகளில் கையாண்டு வருகின்றனர்.”

“ஒவ்வொரு முறையும் இது போன்ற சிக்கலை ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு அதிகபட்சத் தண்டனையாக அப்பள்ளியை விட்டு மாற்றம் செய்வது மட்டும் இப்பிரச்சனைக்குத் தீர்வாகாது. மாறாக, ஒழுங்கு முறையை மீறி நன்னெறிப் பண்புகளின்றி செயல்படும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் மீண்டும் இது போன்ற காரியங்களை அவர்கள் செய்யாமல் இருப்பர்.”

“தொடர்ந்து, இது போன்றவர்களைக் கல்வியமைச்சு ஆசிரியர் தொழிலுக்குத் தகுதியானவர்களாகக் கருதி ஆசிரியர்களாக அங்கீகரித்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிலும்  பயிற்சி ஆசிரியர்கள் தரமானவர்களாகவும் பண்பானவர்களாகவும் இருப்பதைக் கல்வியமைச்சு உறுதிப்படுத்த வேன்டும்.”

“கடந்த 2013ஆம் ஆண்டில், சுங்கை பூலோ தேசியப் பள்ளியில் ரமலான் மாதத்தில் மாணவர்களைக் கழிவறையில் சென்று உணவருந்தச் சொன்னதில் இருந்து இன்று நடந்திருக்கும் இச்சம்பவம் என அனைத்திற்கும் மூலக்காரணம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாததே. நடவடிக்கை கடுமையானதாக இல்லாத காரணத்தால் இம்மாதிரியான செயல்கள் தொடர்ந்து பள்ளிகளில் ஊடுருவ ஆரம்பித்து விட்டன.”

“ஆசிரியர்கள் பள்ளியில் கூறப்படும் கருத்துகள் அனைத்தும் நாட்டிற்கு நன்மையைக் கொண்டு வரும் நோக்கிலும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் உட்பட்டதாகவும் இருக்க வேண்டுமே தவிர, பல இனங்களுக்கிடையே வெறுப்பையும் வேறுபாட்டையும் ஏற்படுத்தும் விதமாக இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.”

“எனவே, இதுபோன்று நாகாரிகமற்ற பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும், இல்லையேல் எதிர்காலத்தில் அது நாட்டில் பல இன மக்களிடையே பெரும் இடைவெளியையும் பாதிப்பையும் ஏற்படுத்தி விடும் என்பதைக் கல்வியமைச்சு உணர வேண்டும். இது போன்ற கேவலமான செயலுக்குத் தகுந்தாற்போல் தண்டனைகளைக் கல்வியமைச்சு சம்மந்தப்பட்டவர்கள் மீது எடுக்க வேண்டும்” எனச் சுப்ரமணியம் தனது பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.