மும்பை, ஜூன் 25- மகாராஷ்டிரா பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் பங்கஜ் முண்டே, 206 கோடி ரூபாய் அளவிலான மெகா ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளார். இவர் மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மகள் ஆவார்.
கடந்த 15–ந் தேதி அகமத்நகர் மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர் மஞ்சுஸ்ரீ குந்த் என்பவரிடம் இருந்து பங்கஜ முண்டே அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. அதில், அகமத்நகர் மாவட்டத்தில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு ‘ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவை’யின்கீழ் விநியோகம் செய்யப்பட்ட உணவுப்பொருட்களில் களிமண் கலக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, பள்ளிக்கூட மாணவர்களுக்கான உணவுப் பொருட்கள் மற்றும் புத்தகங்களை மந்திரி பங்கஜா முண்டே முறைப்படி டெண்டர் விடாமல், 24 அரசு அறிவிக்கைகள் வாயிலாக ஒரே நாளில் (பிப்ரவரி 13–ந் தேதி), ரூ.206 கோடி வரையிலான ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மாநிலம் முழுவதும் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் நொறுக்குத் தீனி, புத்தகம் உட்பட பல்வேறு பொருட்களை வாங்கியதில் அவர் முறைகேடு செய்துள்ளதால் அவர்மீது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென, முன்னாள் முதல்வர் பிரித்வி ராஜ் சவான் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், வெளிநாட்டில் உள்ள பங்கஜ முண்டே, தன் மீதான புகாரை இந்தியாவிற்குத் திரும்பியதும் பொய் என்று நிரூபிக்க உள்ளதாக ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.