காத்மாண்டு, ஜூன்25- பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா நிதி உதவி அறிவித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி, 7.8 ரிக்டர் புள்ளிகள் அளவுக்குக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதில் நேபாளம் உருக்குலைந்து போனது. இதில் 8800-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்; 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அழகான நேபாளம் நிலநடுக்கத்தால் சின்னாபின்னமானது. 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்ததுடன், 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் தள்ளப்பட்டனர்.
நேபாளத்தின் மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 6.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.41 ஆயிரம் கோடி) பணம் தேவைப்படும் என நேபாள அரசு கணக்கிட்டுள்ளது. எனவே இந்தப் பணிகளுக்காக உதவுமாறு உலக நாடுகளுக்குப் பிரதமர் சுஷில் கொய்ராலா வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட உடனே, அங்கு மீட்பு பணிகளுக்காக இந்தியா தனது ராணுவம் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவினரை அனுப்பி உதவி செய்தது. மேலும் அங்கு முதற்கட்ட பணிகளுக்காக நிதி உதவியும் அறிவித்தது. இதைத்தொடர்ந்து மேலும் 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6 ஆயிரத்து 300 கோடி) நிதி உதவியை இந்தியா அறிவித்துள்ளது.
நேபாளத்துக்கான நன்கொடையாளர் மாநாட்டில் இதைத் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தத் தொகையில் கால் பங்குப் பணம் மானியமாகவும், மீதத் தொகை கடனாவும் வழங்குவதாக அறிவித்தார்.
இந்தத் தொகையும் சேர்த்து, நேபாளத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா 2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.12 ஆயிரத்து 600 கோடி) நிதி உதவி வழங்குவதாக அவர் தெரிவித்தார்.