புதுடில்லி, ஜூன் 26- :மத்திய அரசின், நகர்ப்புற வீட்டு வசதித் துறையின் கனவுத் திட்டங்களான ‘அவாஸ் யோஜனா’ என்கிற அனைவருக்கும் வீடு திட்டம், ‘ஸ்மார்ட் சிட்டி’ மற்றும் ‘அம்ருட்’ திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கினார்.
இதில், தமிழகத்திற்கு, 12 ஸ்மார்ட் சிட்டிகளும்(வளர்நிலை நகரங்களும்), 33 அம்ருட் நகரங்களும் கிடைக்க உள்ளன. இதனால், தமிழக நகரங்கள் புதுப் பொலிவு பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட 100 ஸ்மார்ட் சிட்டிகள்,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரிலான அம்ருட் திட்டத்தின் கீழ் 500 நகரங்களைப் புனரமைத்து மேம்படுத்தும் திட்டம், 2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், புதிதாக இரண்டு கோடி வீடுகள் கட்டும் திட்டம் ஆகிய திட்டங்கள் நேற்று டில்லியில் துவக்கப்பட்டன.
பல லட்சம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டங்களுக்கு, மத்திய அரசு நான்கு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.