Home உலகம் ஜெனீவா நகரில் மனித உரிமை மீறல் கூட்டம்: விடுதலைப்புலிகளின் மனைவிகள் கண்ணீர்ப் புகார்!

ஜெனீவா நகரில் மனித உரிமை மீறல் கூட்டம்: விடுதலைப்புலிகளின் மனைவிகள் கண்ணீர்ப் புகார்!

577
0
SHARE
Ad

viduஜெனீவா,ஜூன் 27- ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 29–வது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கடந்த 15–ந் தேதி முதல் நடந்து வருகிறது..

இக்கூட்டத் தொடருக்கு முன்பு, பசுமைத் தாயகம், இங்கிலாந்துத் தமிழர்ப் பேரவை, அமெரிக்கத் தமிழர் அரசியல் செயற்பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்த சிறப்பு இணைக் கூட்டத்தை நடத்தின.

இக்கூட்டத்திற்கு இங்கிலாந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்கள் நீதிக்கான நல்லெண்ணத் தூதுவருமான லீ ஸ்காட் தலைமை தாங்கினார்.

#TamilSchoolmychoice

சர்வதேச மனித உரிமைகள் சட்ட நிபுணரும், இங்கிலாந்து வழக்கறிஞர்கள் பேரவையின் மனித உரிமைக் குழுத் தலைவருமான ஜெனைன் கிறிஸ்டி பிரிமெலோ கியூசி, தமிழக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவைத் தலைவர் க.பாலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இலங்கைப் போரின்போது வெள்ளைக்கொடியுடன் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்களான மலரவன் மனைவி சுசிலாம்பிகை, புலித்தேவன் மனைவி குறிஞ்சி மற்றும் நடேசனின் மகன் உள்ளிட்ட பலருடைய உறவினர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது மலரவன் மனைவி சுசிலாம்பிகை கண்ணீர் மல்கக் கூறியதாவது:

‘‘2009–ம் ஆண்டு மே மாதம் 18–ந் தேதி முல்லைத்தீவு வட்டுவாய்க்கால் பகுதியில் பல போராளிகளுடன் எனது கணவரைச் சரணடைய வைத்தேன். அதன்பிறகு ஆறு ஆண்டுகள் ஆகியும் அவரைப்பற்றி எந்தத் தகவலும் இல்லை. இலங்கை ராணுவம் எந்தப் பதிலையும் தெரிவிக்க மறுக்கிறது’’ என்றார்.

புலித்தேவனின் மனைவி குறிஞ்சி கூறியதாவது:

‘‘இலங்கை அரசு அனுமதியுடன் சர்வதேச நாடுகளுக்குத் தெரிவித்த பிறகு ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலித்தேவன், நடேசன் உள்ளிட்ட போராளிகள் வெள்ளைக்கொடியுடன் சென்று சரண் அடைந்தனர். அதன்பிறகு அவர்களின் உயிரற்ற உடல்களைத்தான் இலங்கை, தொலைக்காட்சியில் காட்டியது. வெள்ளைக்கொடியுடன் சரண் அடைந்தவர்கள் என்ன காரணத்துக்காகக் கொல்லப்பட்டனர் என்பதற்குப் பதில் கிடைக்க வேண்டும்’’ என்றார்.

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. சபையில் வரும் செப்டம்பர் மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அப்போது ஐ.நா.வின் நேரடிச் சாட்சிகளாக உள்ள இந்த மூவரின் சாட்சியங்களால் இலங்கை அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்படும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், போலிச் சாட்சி அளிப்பதற்காகச் சேனல்–4 மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் குறிப்பிட்ட சிலரை ஜெனீவாவுக்கு அழைத்து வந்திருப்பதாக இலங்கை அரசு குற்றம்சாட்டி உள்ளது.