சென்னை, ஜூன் 29 – சென்னையில் மெட்ரோ தொடர்வண்டிச் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று காணொளி அழைப்பு மூலம் துவக்கி வைக்கிறார். இருப்பினும் பயண விவரம் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படாததால், மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
சென்னையில் 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது மெட்ரோ தொடர்வண்டித் திட்டம் துவங்கப்பட்டது. தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.14,600 கோடி மதிப்பில் மெட்ரோ தொடர்வண்டித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை ஒரு வழித்தடம், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை ஒரு வழித்தடம் என மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு சென்னையில் மெட்ரோ தொடர்வண்டி இயக்கப்படுகிறது.
இதில் 24 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையிலும், 21 கி.மீ. தூரம் உயர்த்தப்பட்ட (மேம்பாலம்) பாதையிலும் அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாகக் கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை 10 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலத்தில் மெட்ரோ தொடர்வண்டி இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இதற்காகக் கோயம்பேடு, சிஎம்பிடி, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், சிட்கோ, ஆலந்தூர் ஆகிய இடங்களில்மெட்ரோ தொடர்வண்டி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இறுதியிலேயே இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், ஒருசில காரணங்களுக்காக அரசு துவக்க விழாவைத் தாமதப்படுத்தியது.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதல்வரானதால், எந்த நேரத்திலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப கோயம்பேடு-ஆலந்தூர் வழித்தடங்களில் தண்டவாளம், மின்பாதை உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டது தயார் நிலையில் வைக்கப்பட்டது.
முன்னதாக தொடர்வண்டித்துறைப் பாதுகாப்பு ஆணையர் மற்றும் மத்திய அரசிடம் கோயம்பேடு – ஆலந்தூர் வழித்தடத்தில் மெட்ரோ தொடர்வண்டியை இயக்க அனுமதி வாங்கப்பட்டது.
இம்மாதத் துவக்கத்திலேயே திறப்பு விழா நடத்தப்படும் எனப் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாகத் துவக்க விழா மேலும் தள்ளிப்போனது.
இந்நிலையில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ தொடர்வண்டிச் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று துவங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.