இஸ்லாமாபாத், ஜூன் 29 – பாகிஸ்தானின் சிந்து மாகாண தலைநகர் கராச்சியில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் நேற்று ’ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெயிலினால் ஏற்படும் வாதத்தால் 26 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,300-ஐ எட்டியுள்ளது. இதுகுறித்துச் சிந்து மாகாண சுகாதார அமைச்சர் ஜம் மக்தாப் கூறுகையில்,
”சிந்து மாகாணத்தில் வெயிலின் கொடுமைக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 300-ஐ எட்டியுள்ளது. இதில் 35 சதவீதத்தினர் பெண்கள். 25 சதவீதத்தினர் வீடற்றவர்கள், மற்றும் தெருக்களில் வசிப்பவர்கள் சிலர் போதை மருந்துக்கு அடிமையானவர்கள்.” என்றார்.
பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான வெப்பநிலை உள்ளது. இதனால், மாகாண தலைநகர் கராச்சியில் பெரும்பாலான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், பலர் வெயில் தொடர்பாக ஏற்படும் காய்ச்சல், உடல் வறட்சி மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வெப்பப் பக்கவாதம், உடல் சோர்வு மற்றும் குறைந்த அழுத்தம் காரணமாக மேலும் பலர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.