Home நாடு சுப்ராவின் தலைமைத்துவத்திற்கு மஇகா சிலாங்கூர் மாநிலம் ஆதரவு – கரு.பார்த்திபன் அறிவிப்பு!

சுப்ராவின் தலைமைத்துவத்திற்கு மஇகா சிலாங்கூர் மாநிலம் ஆதரவு – கரு.பார்த்திபன் அறிவிப்பு!

701
0
SHARE
Ad

IMG-20150629-WA0003கோலாலம்பூர், ஜூன் 29 – இன்று மஇகா சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் செயலாளர் கரு.பார்த்திபன் ஏற்பாட்டில் கூடிய சிலாங்கூர் மாநில மஇகாவின் தொகுதித் தலைவர்களும், தொகுதி ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்த கூட்டம், கட்சியின் இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்திற்கு ஆதரவு தெரிவித்தது.

“கடந்த ஓராண்டு காலமாக மஇகாவில் நிலவி வரும் பல்வேறு குழப்பங்களுக்கு நீதிமன்றமும் ஆர்ஓஎஸ் எனப்படும் சங்கப் பதிவகமும் ஒரு முற்றுப் புள்ளி வைத்துள்ளனர். அதற்கேற்ப, இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமானால் நாடு முழுவதுமுள்ள கிளை மற்றும் தொகுதித் தலைவர்கள் கருத்து வேறுபாடின்றி, முழுமையான ஆதரவை இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவர்களுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் இக்கட்சியில் ஒற்றுமை மீண்டும் மலர்ந்து, நெருக்கடிகளுக்குத் தீர்வு காணப்பட்டு, மக்களுக்குச் சேவை செய்யவும், கட்சி முறையான பாதையில் செல்லவும் ஒரு வழி பிறக்கும்” என கூட்டத்திற்குப் பின்னர் கரு.பார்த்திபன் தெரிவித்தார்.

அந்த வகையில் இன்று நடைபெற்ற மஇகா சிலாங்கூர் மாநில தொகுதித் தலைவர்கள் மற்றும் ஒருங்கிணப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன என்றும் அவர் மேலும் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

அந்த முடிவுகள் பின்வருமாறு:-

1.மஇகா சிலாங்கூர் மாநிலத்தின் ஒருங்கிணைப்புத் தலைவராக டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்களை மஇகா மத்திய செயலவை நியமித்துள்ளதை இன்றைய கூட்டம் வரவேற்பதுடன், அவருக்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கும் இன்றைய கூட்டம் முடிவெடுத்தது.

2.மஇகாவின் இடைக்காலத் தேசியத் தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் மஇகாவின் கவனம் முழுவதும் தற்போது கட்சியின் எல்லா நிலைகளிலுமான தேர்தல்களை நடத்துவதிலும், இது தொடர்பில் இடைக்காலத் தேசியத்தலைவர் எடுக்கின்ற முடிவுகளை அமுல்படுத்துவதிலும் செலுத்தப்படுகின்றது. இதற்காகவும் இந்தக் கூட்டம் முழு ஒத்துழைப்பு வழங்க இணக்கம் கண்டது.

3.இடைக்காலத் தேசியத் தலைவருக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கத்தில், எதிர்வரும் 30 ஜூன் 2015 இரவு 8.00 மணியளவில் கிள்ளான் தாமான் ரஸ்னா, உணவகத்தில் நடைபெறும் சிலாங்கூர் மாநில அளவிலான கிளைத் தலைவர்களுக்கான ஆதரவு சந்திப்புக் கூட்டத்தில் கிளைத் தலைவர்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கவும் இந்தக் கூட்டம் முடிவு செய்துள்ளது.

4.இதற்கிடையில், அண்மையில் பிபிபி மற்றும் ஜசெக கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மஇகா விவகாரத்தில் தலையிட்டு விடுத்துள்ள அறிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதுடன், அவர்கள், அவரவர்கள் கட்சிகளில் புரையோடிக் கிடக்கும், குறைபாடுகளைக் களைவதிலும், தீர்வு காண்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும்,மஇகாவின் உட்கட்சி விவகாரங்களில் தேவையற்ற முறையில் தலையிட்டு, குழப்பம் விளைவிக்க வேண்டாம் என்றும்,

இன்றைய இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.

இன்றைய கூட்டத்தின் மேற்கண்ட முடிவுகளை இந்த அறிக்கையின் வழி மஇகா மத்திய செயலவை உறுப்பினரான கே.ஆர்.பார்த்திபன் தெரிவித்துக் கொண்டார்.