Home நாடு 2 ஆண்டுகள் தடை உறுதியானால் ஓய்வு பெறுவேன் – லீ சோங் வெய் அறிவிப்பு

2 ஆண்டுகள் தடை உறுதியானால் ஓய்வு பெறுவேன் – லீ சோங் வெய் அறிவிப்பு

692
0
SHARE
Ad

Lee Chong Wei,பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 27 – போட்டிகளில் பங்கேற்க தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தடை உறுதி செய்யப்படும் பட்சத்தில் விளையாட்டுக் களத்தில் இருந்து ஓய்வு பெறப்போவதாக நாட்டின் முன்னணி பூப்பந்து வீரர் டத்தோ லீ சோங் வெய் தெரிவித்துள்ளார்.

கோப்பன்ஹேகன் நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற சோங் வெய் பின்னர் ஊக்க மருந்து பரிசோதனையின் போது சிக்கினார்.

தடை செய்யப்பட்ட ‘டெக்சாமிதாசோன்’ என்ற மருந்தை பயன்படுத்திய காரணத்தால், 32 வயதான அவருக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார் சோங் வெய்.

#TamilSchoolmychoice

“மேல் முறையீடு தொடர்பான விசாரணைக்காக காத்திருப்பது என்பது மிகுந்த வலியும் வேதனையும் மிக்க அனுபவம். ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய பின்னர் கடந்த பல வாரங்களாக நான் மிகவும் சோகமாக உள்ளேன். இதற்கு முன்பு இப்படிப்பட்ட சூழ்நிலையை நான் எதிர்கொண்டதில்லை. ஒருவேளை எனக்கான தடை உறுதி செய்யப்படும் பட்சத்தில் விளையாட்டுப் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவேன்,” என்று சோங் வெய் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள ஏராளமான ரசிகர்கள் தமக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், மீண்டும் விளையாட முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்.

“தடை செய்யப்பட்ட மருந்து என்பது பரிசோதனையில் சிக்கிய பிறகே தெரிய வந்தது. எனவே இதற்கான விளைவுகளை நான் சந்திக்க வேண்டியுள்ளது. எனது 15 ஆண்டு கால அனுபவத்தில் இப்போது தான் முதல் முறையாக ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வி கண்டுள்ளேன். எனவே எனது நிலையை உலக பூப்பந்து சம்மேளனம் பரிசீலிக்கும் என நம்புகிறேன்,” என்று ஒலிம்பிக்கில் இருமுறை வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ள சோங் வெய் மேலும் கூறியுள்ளார்.

தற்போதைய சர்ச்சை காரணமாக முதல் நிலையிலிருந்து மூன்றாம் நிலை வீரராக, தர வரிசையில் சோங் வெய் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.