Home நாடு மஇகா-சங்கப் பதிவக வழக்கு: கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்புக்கு டாக்டர் சுப்ரா வரவேற்பு

மஇகா-சங்கப் பதிவக வழக்கு: கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்புக்கு டாக்டர் சுப்ரா வரவேற்பு

777
0
SHARE
Ad

subra-dr-selliyal-featureபுத்ரா ஜெயா – சங்கப் பதிவகம் மற்றும் மஇகாவுக்கு எதிராக முன்னாள் மஇகா பத்து தொகுதித் தலைவர் ஏ.கே.இராமலிங்கம், முன்னாள் மஇகா பாகான் தொகுதி (பினாங்கு) தலைவர் டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம், முன்னாள் மஇகா சிகாம்புட் தொகுதி தலைவர் டத்தோ ராஜூ ஆகிய மூவரும் தொடுத்திருந்த வழக்கு தொடர்பிலான மேல்முறையீட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (5 டிசம்பர் 2017) கூட்டரசு நீதிமன்றம் (பெடரல் கோர்ட்) வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் வரவேற்றுள்ளார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய கூட்டரசு நீதிமன்றம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் (கோர்ட் ஆப் அப்பீல்) தீர்ப்பை இரத்து செய்து, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொண்டு மறு உறுதிப்படுத்தியது.

இந்த வழக்கு குறித்து வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியில் “மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட்டரசு நீதிமன்றம் திருத்தி எழுதியிருக்கும் இந்த நாள் ஒரு வரலாற்றுபூர்வ சிறப்பு நாளாகும். கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் அதே நேரத்தில் இந்த தீர்ப்பு குறித்த சில விளக்கங்களையும் வழங்க கடமைப்பட்டுள்ளேன்” என டாக்டர் சுப்ரா தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“இந்த வழக்கைத் தொடுத்திருந்த 8 வாதிகளும் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துவதிலிருந்து வாபஸ் பெற்றுக் கொண்டாலும் இந்த வழக்கு தொடர்பான சட்ட அம்சங்களையும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கூட்டரசு நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக எங்களின் வழக்கறிஞர் குழு கருதியது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்காலத்தில் அரசாங்கத்தின் மீதும், அரசியல் கட்சிகளின் மீதும், மிகவும் கடுமையான, முக்கியமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பதால் அதனை கூட்டரசு நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாக வழக்கறிஞர் குழு கருதியது. கூட்டரசு நீதிமன்றமும் பிரதிவாதிகளின் வழக்கறிஞர் குழு சமர்ப்பித்த வாதங்களை ஏற்றுக் கொண்டு மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்திருப்பது குறித்தும், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு உறுதிப்படுத்தி நிலைநாட்டியிருப்பது குறித்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என டாக்டர் சுப்ரா இன்று விடுத்திருக்கும் பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.