Home நாடு மஇகா: மீண்டும் இணைந்தவர்களுக்கு உறுப்பியத் தொடர்ச்சி

மஇகா: மீண்டும் இணைந்தவர்களுக்கு உறுப்பியத் தொடர்ச்சி

1122
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை (மே 29) நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில், அண்மையக் காலங்களில் மீண்டும் மஇகாவில் இணைந்த மஇகா உறுப்பினர்களுக்கு உறுப்பியத் தொடர்ச்சிக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

மஇகா தேசியப் பொதுப் பேரவை அங்கீகரித்த புதிய சட்டவிதிகளின்படி, தேசிய நிலையிலான பதவிகளுக்குப் போட்டியிடும் மஇகா உறுப்பினர்கள் சில பதவிகளுக்கு 5 ஆண்டுகளும், சில பதவிகளுக்கு 10 ஆண்டுகளும் தொடர்ச்சியான கட்சி உறுப்பியத்தைக் கொண்டிருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

2013-இல் மஇகாவில் ஏற்பட்ட தலைமைத்துவப் போராட்டத்தினால் மஇகாவினர் இரண்டு அணிகளாகச் செயல்பட்டனர். பின்னர் நடப்பு தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தின் தலைமைத்துவத்தின் கீழ் பல தலைவர்கள் கட்டம் கட்டமாக மஇகாவில் மீண்டும் இணைந்தனர்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து அவ்வாறு இணைந்தவர்களுக்கு கட்சியில் பதவிகள் வழங்கப்பட்டாலும், அவர்களுக்கு உறுப்பியத் தொடர்ச்சி இருக்கிறதா என்ற குழப்பம் மஇகாவில் சில தரப்புகளால் ஏற்படுத்தப்பட்டு வந்தது.

அதை நிவர்த்திக்கும் வகையில் நேற்றைய மஇகா மத்திய செயலவை, மஇகாவில் இணைந்தவர்கள் அனைவருக்கும் உறுப்பியத் தொடர்ச்சியை அங்கீகரித்திருக்கிறது.

ஏற்கனவே, 2016 மே மாதத்தில் நடத்தப்பட்ட சிறப்பு மஇகா பொதுப் பேரவையில் இவ்வாறு உறுப்பியத் தொடர்ச்சியை உறுப்பினர்களுக்கு வழங்கும் அதிகாரத்தை மஇகா பேராளர்கள் மத்திய செயலவைக்கு வழங்கியிருந்தனர்.

மஇகா தேசியத் தலைவர் தேர்தல்

இதற்கிடையில் விரைவில் நடைபெறவிருக்கும் மஇகா தேசியத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் குழு நேற்றைய மத்திய செயலவைக் கூட்டத்தில் அமைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த மஇகா தேசியத் தலைவருக்கான தேர்தலில் தேசியத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன் என நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அறிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்குப் போட்டியிடப் போவதாக நடப்பு மஇகா தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்திருக்கிறார்.