Home நாடு கடன் அட்டை பெயரில் புதிய வகை இணைய மோசடி – பகுதி 2

கடன் அட்டை பெயரில் புதிய வகை இணைய மோசடி – பகுதி 2

1081
0
SHARE
Ad

cyber-crime_325x305கோலாலம்பூர், பிப்ரவரி 23 – கடன் அட்டை என்ற பெயரில் தனியார் வங்கி மற்றும் பேங்க் நெகாராவின் பெயரைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் மோசடி செய்யும் மர்ம கும்பல் குறித்து கடந்த வாரம் முதல் பாகம் செல்லியலில் வெளியிடப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, இது போன்ற மோசடி கும்பலிடம் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து தகவல்கள் இதோ:

படித்த மக்கள் கூட ஏமாறுவது எப்படி?

#TamilSchoolmychoice

இது போன்ற மோசடி கும்பல்களிடம் நன்கு படித்த மக்கள் கூட ஏமாறுவதற்குக் காரணம் நமது அவசர மனநிலையும், முன்யோசனையற்ற நடவடிக்கைகளும் தான் என்கிறது காவல்துறை.

அதே வேளையில், இது போன்ற மோசடி வேலைகளில் ஈடுபடும் கும்பல், மக்களை நம்ப வைக்கும் அளவிற்கு பேச்சுத்திறமையும், செயல்பாடுகளில் நிபுணத்துவமும் கொண்டிருப்பதை அவர்கள் மறுக்கவில்லை.

இதையே தான் பணத்தை இழந்த பெண்ணும் கூறுகின்றார்.

“நான் எல்லா விஷயங்களிலும் முன் ஜாக்கிரதை உணர்வோடு தான் இருப்பேன். ஆனால் அன்று அவர்கள் பேசியது ஒவ்வொன்றும் , அப்படியே வங்கி அதிகாரிகள் பேசுவது போல், ஒரு சிறு சந்தேகம் கூட ஏற்படாத அளவிற்கு இருந்தது. நான் ஏமாற்றப்பட்டேன் என்பதை இன்றும் என்னால் நம்பமுடியவில்லை” என்றார் அப்பாவியாக.

இன்று இணையத்தில் எங்காவது ஒரு இடத்தில், ஏதாவது ஒரு பகுதியில் நமக்கே தெரியாமல், நம்மைப் பற்றிய தகவல் பரவிக் கிடப்பது தொழிநுட்பத்தின் வரமும் சாபமும் ஆகும். அந்த தகவல் மூலம் நமக்கு நல்ல வாய்ப்புகளும் வருகின்றது. அதே நேரத்தில் இது போன்ற மோசடி கும்பல்களுக்கும் அது உதவுகின்றது.

நினைத்தவுடன் பேஸ்புக், டிவிட்டர் என பல கணக்குகளைத் திறந்து கொள்ளும் பலர், அதை எப்படி cyber-crime1 (1)பாதுகாப்புடன் பயன்படுத்துவது, ‘Privacy & Security’ ல் என்னென்ன தேவையான மாற்றங்களை செய்தால், தங்களது தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் பரவுவதை தடுக்கலாம் என்பது போன்ற அங்கங்களில் கவனம் செலுத்துவதில்லை என்பது வருத்தமளிக்கின்றது.

அது போன்ற சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால் செய்ய வேண்டியவை என்ன? செய்யக் கூடாதவை என்ன? என்று மலேசிய இணைய பாதுகாப்புத் துறை (Cyber security) சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

1. முதலில் இது போன்ற சந்தேகத்திற்கு குரிய அல்லது தெரியாத (Unknown) அழைப்புகள் வந்தால் அதை தவிர்ப்பது நல்லது

2. ஏதாவது வங்கி பெயரிலோ அல்லது நிறுவனத்தின் பெயரிலோ உங்களுக்கு அழைப்பு வந்து, உங்களது தனிப்பட்ட தகவல்களையோ அல்லது ரகசிய எண்களையோ (password) கேட்டால், அந்த எண்ணை அவர்களது அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று சோதனை செய்வது நல்லது. முடிந்தவரை நேரடியாக அந்த வங்கிக்கே சென்று உறுதி செய்து கொள்வது சிறந்தது.

3. முகம் தெரியாத நபர்களுக்கு இணையம் (Online Banking) வழியாகவோ, மின்னியல் அட்டை (ஏடிஎம்) வழியாகவோ பணம் அனுப்புவது முற்றிலும் தவறு.

4. மர்ம நபர்களிடமிருந்து அழைப்புகள், மிரட்டல்கள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல் என ஏதாவது வந்தால் உடனடியாக cyber999@cybersecurity.myPortal Cyber999 என்ற வலைத்தளங்களுக்கு சென்று புகார் அளிக்கலாம். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்கள் அறிவுரை வழங்குவார்கள்.

இந்த இணைய மோசடியில் சிக்கியுள்ளீர்களா?

1.இந்த இணைய மோசடியில் நீங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்ந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரடியாக சென்று புகார் அளிக்கவும். அவர்கள் உங்கள் வங்கிக் கணக்கை பாதுகாக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

2. காவல்துறைக்கு சென்று புகார் அளித்து, அந்த நகலையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

3. உங்களுக்கு மோசடி கும்பலிடமிருந்து வந்த அழைப்பு எண், குறுந்தகவல்கள், மின்னஞ்சல் மற்றும் பணம் பரிமாற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் அனைத்தையும்  Portal Cyber999 ன் உதவி பிரிவிற்கோ அல்லது அருகிலுள்ள காவல்நிலையத்திலோ கொடுத்து புகார் அளிக்க வேண்டும்.

மருத்துவக் காப்பீடு, வங்கி கடன் என நமது செல்பேசிக்கு தினமும் ஏதாவது ஒரு தெரியாத அழைப்புகள் வருவதை தவிர்க்க முடிவதில்லை. அவர்களுக்கெல்லாம், எங்கிருந்து நமது பெயரும், தொடர்பு எண்ணும் கிடைக்கின்றது என்ற கேள்வி எழலாம்.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இது போன்ற நிறுவனங்களுக்கு தங்களது வாடிக்கையாளர்களின் முழு விபரங்கள் அடங்கிய தரவு தளத்தை (Data base) விற்பதால், அதை சில மோசடி கும்பல்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன என்று கூறப்படுகின்றது.

எது எப்படியோ, இன்றைய சூழலில், நம்முடைய சுய பாதுகாப்பை நாமே சொந்தமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

அவ்வாறு எல்லா விஷயங்களிலும் அவசரப்படாமல் சிந்தித்து செயல்பட்டால் நிச்சயம் இது போன்ற சம்பவங்களை தவிர்க்கலாம்.

– ஃபீனிக்ஸ்தாசன்