கோலாலம்பூர், மார்ச் 26 – தினக்குரல் நாளிதழ் நிருபர் எஸ்.பி.சரவணனின் ‘ஒரு நிருபரின் டைரி’ மற்றும் சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப் பள்ளி ஆசிரியை மற்றும் பேச்சாளரான தமிழ்வாணி கருணாநிதியின் ‘எனக்குள் ஒருத்தியின் எண்ணத் துகள்கள்’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா, கடந்த வெள்ளிக்கிழமை (21-3-14) அன்று கோலாலம்பூர் ம.இ.கா தலைமையகத்திலுள்ள நேதாஜி அரங்கில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இளைஞர், விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ சரவணன், மைஃபெய் அமைப்பின் தலைவர் டத்தோ கீதாஞ்சலி ஜி, ம.இ.கா வியூக இயக்குநர் சா. வேள்பாரி, ம.இ.கா மகளிர் பிரிவுத் தலைவர் மோகனா முனியாண்டி, மகேந்திர குருக்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
மலேசியக் கலைஞர்களுக்கு நன்கு அறிமுகமானவர் எஸ்.பி.சரவணன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. காரணம் கலைஞர்களின் சிறு சிறு முயற்சிகளையும் ஊக்குவிக்கும் வகையில், அதை பாராட்டி செய்தியாக வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், தவறுகள் நடக்கும் சமயங்களில் நாசூக்காக, மனம் புண்படாதபடி அதை சுட்டிக் காட்டுவதிலும் வல்லவர்.
அதே போல், பாடவரலாம் முதல் மலேசியாவில் நடக்கும் பல முக்கிய மேடை நிகழ்ச்சிகளில் தமிழ் வாணி கருணாநிதி அவர்களின் அழகான தமிழைக் கேட்கலாம். பெயருக்கு ஏற்றார் போல் கொஞ்சும் தமிழாலும், தனது இனிமையான குரலாலும், சுத்தமாக தமிழை உச்சரித்து மேடையை அலங்கரிப்பார்.
இந்த இரு பிரபலங்களும் இணைந்து தங்களின் முதல் நூலை ஒன்றாக சேர்த்து வெளியிடும் விழா எப்படி இருக்கும்? ஆம் …பல மலேசியக் கலைஞர்களும், அரசியல் தலைவர்களும், நண்பர்களும், அவ்விருவரின் உறவினர்களும் புடைசூழ மிக விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்வாணி தனது நூல் பற்றி பேசுகையில், தனக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மைகளையும், கடந்த வந்த பாதையில் தான் எதிர்கொண்ட பல சவால்களையும் உடைத்து எறிந்து, தமிழ் மீது கொண்ட அதீத ஆர்வத்தின் மூலம் அதை எப்படி மேலும் வளர்த்துக் கொண்டார் என்பதை கவிதை வடிவில் சொல்லும் நூல் தான் ‘எனக்குள் ஒருத்தியின் எண்ணத் துகள்கள்’ என்று விளக்கமளித்தார்.
அடுத்ததாகப் பேசிய எஸ்.பி.சரவணன், தான் கடந்த 2008 ஆம் ஆண்டு பத்திரிக்கைத் துறையில் காலடி எடுத்து வைத்தது முதல், இந்த 6 ஆண்டுகளில் தான் சந்தித்த பல அனுபவங்களின் பின்புலத்தில் இருக்கும் வெளியுலகிற்குத் தெரியாத பல சுவாரஸ்யமான கதைகளை இதில் எழுதியிருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், 25 கதைகளை எழுத நினைத்து, பின்னர் நேரமின்மையின் காரணமாக 15 கதைகளோடு நிறுத்திக் கொண்டதாகவும், ஆனால் நிருபரின் டைரி பாகம் இரண்டு தொடரும் என்றும் சரவணன் கூறினார்.
இவ்விழாவில் கலந்து கொண்ட குருஸ்ரீ சந்திரமோகன், நமது தமிழ் கலாச்சாரங்களை மக்கள் எப்படியெல்லாம் இழிவு படுத்துகின்றனர். தமிழர்களே தங்களது பிள்ளைகளிடத்தில் தமிழில் பேசத் தயங்குகின்றனர் என தனது மனக் குமுறல்களை வேதனையுடன் தெரிவித்தார். அதே நேரத்தில், குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுப்பதில் பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து பேசிய, மகேந்திரக் குருக்கள் இன்றைய நாகரிக உலகில் பெண்கள் எப்படியெல்லாம் உடை உடுத்துகின்றனர், சிகை அலங்காரம் செய்து கொள்கின்றனர் என்பதை வேடிக்கையாக பேசி வந்திருந்த அனைவரையும் கலகலப்பாக்கினார்.
இறுதியாக பேசிய டத்தோ சரவணன், மக்கள் எப்படியெல்லாம் சடங்குகளின் பிடியில் சிக்கி வீணாகப் பணத்தை செலவழிக்கின்றனர் என்பதையும், சமூகத்தில் இன்று நடக்கும் அவலங்களையும் நகைச்சுவையாக சுட்டிக் காட்டினார்.
நேரம் போவதே தெரியாமல், மிக இனிமையாக ஒரு இலக்கிய விழா போல் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தமிழ்நேசன் நாளிதழின் தலைமை நிருபர் தயாளன் சண்முகம் மற்றும் வானொலி அறிவிப்பாளர் புனிதா சுப்ரமணியம் ஆகிய இருவரும் மிகச் சிறப்பாக வழி நடத்தினர்.
– பீனிக்ஸ்தாசன்