கோலாலம்பூர், மார்ச் 26 – கடந்த மார்ச் 8 ஆம் தேதி, கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கி சென்ற MH370 விமானம் தனது வழக்கமான பாதையில் இருந்து விலகி, மலாக்கா நீரிணை வழியாக கடந்து சென்ற போது, அது கட்டுப்பாட்டு அறையின் கட்டளையின் பேரில் தான் திரும்புகிறது என்று “அனுமானம்” செய்து கொண்டதாக மலேசிய விமானப்படை (The Royal Malaysian Air Force) இன்று அறிவித்துள்ளது.
இது குறித்து துணை தற்காப்பு அமைச்சர் அப்துல் ரஹீம் பக்ரி கூறுகையில், “இராணுவ ரேடாரில் அதிகாலை 2.40 மணியளவில் கண்டறியப்பட்ட அந்த விமானம் முதலில் MH370 தான் என்பது அடையாள காணப்படவில்லை. ஆனால் அது ‘உளவு விமானம்’ அல்ல என்பதை மட்டும் அறிய முடிந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “விமானக் கட்டுப்பாட்டு அறையில் கிடைத்த தகவலின் படி தான், அந்த விமானம் திரும்புகிறது என்று நினைத்தோம்” என்று இன்று நாடாளுமன்றத்தில் தனது அறிக்கையில் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.
“மலாக்கா நீரிணை அல்லது அந்தமானை கடலை நோக்கி அந்த விமானம் பறந்ததை நாங்கள் கவனித்தோம். அதனால் தான் அதற்கு அடுத்த நாள் விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம்” என்றும் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.