சுராபாயா, டிசம்பர் 31 – கடலில் மிதந்து கொண்டிருந்த ஏர் ஆசியா பயணியின் சடலம் மற்றும் விமானத்தின் பாகங்களை இந்தோனேசிய தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியதைக் கண்ட, ஏர் ஆசியா விமானப் பயணிகளின் குடும்பத்தார் கதறி அழுதனர்.
சுராபாயாவில் உள்ள ஜுவான்டா அனைத்துலக விமான நிலையத்தில் அமைக்கப் பட்டிருக்கும் பேரிடர் மையத்தில் குழுமியிருந்த விமானப் பயணிகளின் குடும்பத்தார் இக்காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டதும் ‘ஓ’வென பெருங்குரலெடுத்து, கதறினர்.
பலர் இடைவிடாமல் அழுது அரற்றிய நிலையில், ஓர் ஆடவர் தனது முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு கதறியபடியே மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதேபோல் கண்ணீர்விட்ட ஒரு பெண்மணியை சுராபாயா நகர மேயர் அமைதிப்படுத்தினார்.
இதற்கிடையே ஏர் ஆசியா பயணியின் சடலம் கடலில் மிதக்கும் காட்சிகளை தணிக்கை செய்யாமல் நேரலையில் ஒளிபரப்பியதற்காக அக்குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஏர் ஆசியா அதிகாரி ஒருவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஏர் ஆசியா விமான பாகங்கள் கடலில் மிதப்பதாக செவ்வாய்க்கிழமை தகவல் வெளியானபோதும், பேரிடர் மையத்தில் குழுமியிருந்த பயணிகளின் உறவினர்கள் மத்தியில் இறுக்கமான அமைதியே நிலவியது.
சிலர் அது ஏர் ஆசியா விமானத்தின் பாகங்கள் அல்ல என்றும் நம்பினர்.
ஆனால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளைக் கண்டதும் பயணிகளின் உறவினர்கள் மனதளவில் நொறுங்கிப் போயினர்.
அந்தப் பேரிடர் மைய அறையில் அதன் பின்னர் சோகமும், கதறல்களும், குமுறல்களும் சூழ்ந்து கொண்டன.