சியோல் – கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வடகொரியா, தென்கொரியா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தைக்குக் காரணமாக இருந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, தென்கொரிய அதிபர் மூன்ஜே தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 1953-ம் ஆண்டு கொரியா இரண்டாகப் பிரிந்ததில் இருந்து எப்போதும் பதற்ற நிலையிலேயே இருந்து வந்த இருநாட்டு எல்லைப் பகுதியில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், இப்பேச்சுவார்த்தைக்கு பிறகு தென் கொரியாவில் நடைபெறும் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வடகொரியா சார்பில் வீரர்கள் குழு அனுப்பப்படும் என்று வட கொரியா அறிவித்திருக்கிறது.
வட கொரியா அணு ஆயுதப் பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு, கேசோங் தொழில் மண்டலத்தின் கூட்டு பொருளாதார திட்டத்தை தென் கொரியா நிறுத்தியது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்தது.
இவ்விரு நாடுகளுக்கும் இடையே இறுதியாக உயர்மட்ட பேச்சுவார்த்தைகள், 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.