Home நாடு மஇகா தலைமையகத்தில் பொங்கல் கொண்டாட்டம்

மஇகா தலைமையகத்தில் பொங்கல் கொண்டாட்டம்

884
0
SHARE
Ad

ponggal-mic hq-15012018 (1)கோலாலம்பூர் – மலேசிய இந்தியர்களிடையே கொண்டாடப்படும் பெருநாட்களை மஇகா தலைமையகமே அண்மையக் காலமாக ஏற்று முன்னின்று நடத்தி வருகிறது. அந்த வரிசையில் நேற்று திங்கட்கிழமை மஇகா தலைமையகமும், மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலமும் இணைந்து பொங்கல் விழாவை மஇகா தலைமையகத்தில் கொண்டாடின.

இந்தக் கொண்டாட்டத்தின் சிறப்பு அங்கமாக மஇகா தலைமையகக் கட்டடத்தின் முன்பாக மகளிர் பகுதியினர் பொங்கல் வைத்தனர். அதே வேளையில் நேற்று மாட்டுப் பொங்கலாதலால் மாடுகளும் மஇகா தலைமையகத்திற்குள் கொண்டு வரப்பட்டன.

ponggal-mic hq-15012018 (4)டாக்டர் சுப்ராவின் உரை

இந்த பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவர் டத்தோ எம்.சரவணன் வரவேற்புரையாற்றினார்.

#TamilSchoolmychoice

ponggal-mic hq-15012018 (6)நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தனது உரையில் “மஇகா அனைவருக்கும் பொதுவானது, சொந்தமானது என்பதை உணர்த்தும் வகையில் அனைத்து மத, இன திருநாட்களையும் மஇகா தலைமையகத்தில் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் இன்று பொங்கல் திருநாளைக் கொண்டாடுகிறோம். அதே சமயம் பொங்கலுக்கு எந்தவித மத அடையாளமும் இன்றி, மத சம்பிராதயங்கள் இன்றி இந்தப் பெருநாளைக் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். பொங்கல் தமிழர் திருநாளாகப் பார்க்கப்படுகிறது. அனைத்துப் பிரிவினருக்கும், மதத்தினருக்கும் உரிய நாள் அது” என்று கூறினார்.

ponggal-mic hq-15012018 (3)“நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் இருப்பதாகக் கருதுகிறேன். அத்தகைய ஒரு தேவை இருந்த காரணத்தால்தான் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னரே அமரர் கோ.சாரங்கபாணி தமிழர் திருநாள் என்ற பெயரில் நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும், மொழியையும் காக்க ஒரு போராட்டத்தைத் தொடங்கினார். அத்தகைய ஒரு போராட்டத்தை நாம் தொடர நமக்குள் ஒற்றுமை குறிப்பாக அரசியல் ஒற்றுமை இருக்க வேண்டியது அவசியமாகும்” என்றும் அவர் தனதுரையில் வலியுறுத்தினார்.

ponggal-mic hq-15012018 (7)“இந்நாட்டில் இந்தியர்கள் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல்கள் காரணமாக அரசியல் பலத்தை இழந்துவிட்டால் அது அவர்களைப் பலவீனப்படுத்துவதோடு, காலப் போக்கில் அவர்களது அடையாளத்தையும் இழக்கச் செய்து விடும்” எனவும் எச்சரித்த டாக்டர் சுப்ரா, “இந்நாட்டைப் பொறுத்தவரை இந்தியர்கள் கல்வியாக இருந்தாலும் சரி, வீட்டுடைமையாக இருந்தாலும் சரி, வேலை வாய்ப்பாக இருந்தாலும் சரி, கோவில் கட்டுவதாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடம் கட்டுவதாக இருந்தாலும் சரி போராடித்தான் பெற வேண்டியுள்ளது. எனவே, நாம் அரசியலில் பலமாக இருந்தால்தான் நமது கோரிக்கைகள் எடுபடும். எனவே நமக்குள் அரசியல் ஒற்றுமை முக்கியம்” எனவும் டாக்டர் சுப்ரா தெளிவுப்படுத்தினார்.

ponggal-mic hq-15012018 (5)